கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றாலும், கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 4,807 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது, 88 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,65,714ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,403ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 19) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கொரோனா நிலவரங்கள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக முதல்வர், பிரதமரிடம் தெரிவித்தார் என்றும் அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**எழில்**
�,