டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில், ‘பிட்காயின் முறையை அதிகாரப்பூர்வமாக இந்தியா ஏற்றுக்கொண்டது. அதிகாரப்பூர்வமாக 500 பிட்காயினை வாங்கி இந்தியக் குடிமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு பிட்காயின் தொடர்பான ஒரு லிங்க்கும் ஷேர் செய்யப்பட்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் பிரதமரின் தனிப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
“இப்பதிவைக் கருத்தில் கொள்ள வேண்டாம். பிரதமரின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டு, ஹேக்கர்களால் பிட்காயின் சட்டப்பூர்வமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் உடனடியாக ட்விட்டர் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டு பிரதமரின் கணக்கு மீட்கப்பட்டது. பிட்காயின் தொடர்பாகப் பகிரப்பட்ட கருத்துகள், பதிவுகளைப் புறக்கணிக்க வேண்டும்” என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.
இப்படி பிரதமரின் ட்விட்டர் அக்கவுன்ட்டை ஹேக் செய்து அதில் அறிவிப்பு வெளியிடும் அளவுக்கு பிட் காயின் என்பது இந்தியாவில் தற்போது விவாதப் பொருளாகிவிட்டது. பிட் காயின் என அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது.
**பிட் காயின் என்றால் என்ன? கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?**
இந்தியாவுக்கு ரூபாய், சீனாவுக்கு யென், அமெரிக்காவுக்கு டாலர் என்பது அந்தந்த நாடுகள் தங்களுக்கென அங்கீகரித்துள்ள கரன்சியின் பெயர்கள். ஆனால் உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு கரன்சி உருவாக வேண்டியது இன்றைய பொருளாதாரத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வெர்ச்சுவல் கரன்சி அல்லது யுனிவர்சல் கரன்சி என்ற பொருள்படக் கூடிய பிட் காயின் அல்லது கிரிப்டோர் கரன்சி.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முழக்கங்களைப் போல பொருளாதாரம் தொடர்பாக ஒரே உலகம் ஒரே கரன்சி என்பதுதான் பிட் காயினுக்கான அடிப்படை.. ஆனால் இந்த முன்னெடுப்பு உலகம் முழுமையிலும் உள்ள நாடுகளால், முக்கியமான வங்கிகளால் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டில் சடோஷி நகல்மோட்டோ (satoshi nakalmoto) என்பவர் 2009 ஜனவரி மாதம் 9ஆம் தேதி, பிட் காயின் டிஜிட்டல் பரிவர்த்தனையை உருவாக்கி 2010இல் பீசா கடையில் புழக்கத்தில் விட்டார், அன்று ஒரு பிட் காயின் மதிப்பு இரண்டு டாலராக இருந்தது இந்தியா மதிப்பு சுமார் 150 ரூபாய், இன்று 2021 டிசம்பர் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 50 ஆயிரம் டாலர், இந்திய மதிப்பு சுமார் 40 லட்சமாக உள்ளது.
கிரிப்டோ கரன்சியில் கடந்த ஒன்பது வருடமாக டிரேடிங் கண்காணித்துவரும் சிறந்த அனுபவம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த www.cryptomoon.in முகவர் மணிகண்டன் நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையிடம் பிட்காயின் – கிரிப்டோ கரன்சியைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
“பிட் காயின் என்பதன் பெயர் காரணம் சுவாரஸ்யமானது. இன்றைக்கு ஒரு பிட் காயின் விலை இந்திய மதிப்பில் 40 லட்சம் ரூபாயாக உள்ளது. நீங்கள் முழுமையாக ஒரு பிட் காயினை வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘பிட்’அதாவது அதில் ஒரு பகுதி காயினை கூட நீங்கள் வைத்திருக்கலாம். இதுதான் பிட் காயின் என்ற பெயர் புழக்த்துக்கு வரக் காரணம். மற்றபடி இது வெர்ச்சுவல் கரன்சிதான் அல்லது கிரிப்டோ கரன்சிதான்.
இன்றைய நிலவரப்படி உலகத்தில் 15,500 கிரிப்டோ கரன்சி புழக்கத்தில் உள்ளது, அதில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட காயின்கள் போலியானதாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட பிரைவசி காயின்கள் உள்ளது, மொத்தம் 2.2 டிரில்லியன் டாலர் ( 2.2 லட்சம் கோடி டாலர் இன்றைய மதிப்பில் புழக்கத்தில் உள்ளது.
கிரிப்டோ கரன்சியில் பிட்காயின், எத்திரியம், லைட்காயின் போன்ற காயின் பரிவர்த்தனை செய்தால், எங்கிருந்து எங்கே போகிறது என்று தெரியும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பிரைவசி காயின் பரிமாற்றத்தை யாரிடமிருந்து யாருக்குப் போகிறது என்று கண்டுபிடிக்க முடியாது, அதைப் பயன்படுத்துபவர்கள் யார் என்றால், பெரும்பாலானோர் சமூக விரோதமாக வியாபாரம் செய்யக்கூடியவர்கள்தான் இருப்பார்கள்.
ரான்சம் வேர் (ransom ware) என்ற வைரஸ் உள்ளது, அந்த வைரஸ் மூலமாகப் பெரிய பெரிய நிறுவனத்தின் கம்யூட்டர் சர்வேரை ஹேக் செய்துவிடுவார்கள், அந்த ஹேக் ரிலீஸ் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேரம் பேசுவார்கள். அப்போது தங்களது பிரைவசி வேலட் அட்ரஸுக்கு பிரைவசி காயினாக மட்டுமே மாற்றச்சொல்வார்கள். Monero, Zcash, dash, pivx, firo, beam போன்ற 100க்கும் மேற்பட்ட பிரைவசி காயின்கள் உள்ளது.
அதேபோல் dark web silkroad போன்ற இணைய பிளாக் மார்க்கெட்டில் ஆயுதங்கள் உட்பட அனைத்து விதமான தடைசெய்யப்பட்ட பொருட்களையும் வாங்கலாம். , அவர்களிடம் பிரைவசி காயின் மூலமாகத்தான் வாங்கமுடியும், இந்த பரிவர்த்தனையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்படியாக பிட் காயின் என்பது அசாதாரணமானதாக இருப்பதால்தான் இந்தியா இதைப் பற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறது”என்கிறார் மணிகண்டன்.
“இந்த பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியை உலகில் எந்த நாடுமே இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லையா?”
“இப்போதைக்கு கிரிப்டோ கரன்சியை elsalvator நாடு முழுமையான அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் ஐஸ்க்ரீம் முதல் அனைத்துப் பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தி வருகிறார்கள், உலகளவில் விமானம் நிலையம், பெரிய பெரிய மால்கள் மற்றும் ஹோட்டல்களில், 6 ஆயிரம் பிட்காயின் ஏடிஎம் மிஷின்கள் உள்ளன. அதில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து உங்களிடம் இருக்கும் பிட் காயின் மதிப்புக்கு ஏற்ற உள்ளூர் கரன்சிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறை தற்போது வரையில் பயன்பாட்டிலிருந்துவருகிறது”
“பிட்காயின் என்றாலே மோசடி என்று பயந்து ஓடுகிறார்கள் இந்தியர்கள். குறிப்பாகப் பலபேர் பிட்காயினில் முதலீடு செய்து ஏமார்ந்து போயுள்ளார்களே…?”
”உண்மைதான், மொத்தம் உள்ள 21 மில்லியன் பிட்காயினில் 14 மில்லியன் பிட்காயின்கள்தான் நடைமுறையில் உள்ளது, இரண்டாயிரம் டாலர் இருந்தால்.பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியை யார் வேண்டும் என்றாலும் உருவாக்கலாம். இந்தியாவில் குறிப்பாகக் குஜராத்தில் பெரு முதலாளிகளின் சில குரூப்கள், பிட் காயின் போன்று, போலி கரன்சியை உருவாக்கி மக்களிடம் எம்.எல்.எம் போல் (மல்ட்டி லெவல் மார்கெட்) 10போட்டால் 100, 100 போட்டால் 1000 என்றும், ஆள் பிடித்து விடுபவர்களுக்கு கமிஷன் மேல் கமிஷன் வரும் என்றும் ஆசைகாட்டி ஏமாற்றியும் வருகிறார்கள். சில ஆண்டுகாலமாக ஆந்திராவிலும் இதுபோன்ற போலி காயின்களை அறிமுகப்படுத்தி ஏமாற்றி வருகிறார்கள், இதுபோல் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்கள் என்று தகவல்.
வெளிநாடுகளில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து நல்ல சம்பாதித்து வருகிறார்கள் இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி பலரும் நன்றாக சம்பாதித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியல் அதிகாரத்தில் உள்ள வாரிசுகள் பலரும் கிரிப்டோ கரன்சி எக்சேஞ்சில் பல ஆயிரம் கோடி முதலீடுகள் செய்துள்ளனர்.
ஒன்றிய அரசும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்க ஆலோசனைகள் செய்துவருகிறது. இதை முறையாக செயல்படுத்தினால் அரசுக்குப் பல லட்சம் கோடி வரியாக வருவாய் வந்து குவியும்” என்கிறார் மணிகண்டன்.
உலகமய பொருளாதாரம் ஓங்கியுள்ள நிலையில்… கிரிப்டோ கரன்சி -பிட் காயின் விவகாரத்தில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
**-வணங்காமுடி**
�,”