உலகில் நடக்கும் எந்த ஊழலையும் மக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமை. அந்த ஊடகங்களைப் பார்க்கும் மக்களையும், அவற்றுக்கு விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்களையும் ஏமாற்றி ஊழல் செய்து லாபம் சம்பாதிக்கும் தில்லு முல்லு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால், இதோ மும்பை போலீஸ் அப்படி சில ஊடகங்களை பிடித்திருக்கிறது.
இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் ஹன்சா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம், சிலர் டிஆர்பி ரேட்டிங் அளவில் தவறு செய்வதாக புகார் ஒன்றைக் கொடுத்தது. நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனங்களின் டிஆர்பி ரேட்டிங்கை கணக்கிடுவது ஹன்சா நிறுவனத்தின் பணி. இந்த டிஆர்பி ரேட்டிங்கை அடிப்படையாக வைத்துதான், அவற்றின் விளம்பரங்களுக்கான தொகை நிர்ணயிக்கப்படும். எனவே, ஒவ்வொரு சேனலுக்கும் இந்த டிஆர்பி ரேட்டிங்கை சரியாகக் கொடுப்பதற்கு, 30,000க்கும் மேற்பட்ட இடங்களில் பாரோமீட்டர் எனப்படும் கருவியைப் பொருத்தி டிஆர்பி ரேட்டிங்கை கணக்கிட்டு வந்தது இந்நிறுவனம். சில காலமாக, தங்களுக்கு வரும் டிஆர்பி ரேட்டிங்கில் தவறுகள் இருப்பதை உணர்ந்த இந்நிறுவனம், மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விசாரணையைத் தொடங்கியது மும்பை போலீஸ். விசாரணையில், ஹன்சா நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், சில நண்பர்களுடன் சேர்ந்து பாரோமீட்டரில் மாறுதல்கள் செய்து குறிப்பிட்ட சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகமாகக் கிடைக்கும்படி செய்தது தெரியவந்திருக்கிறது. இவர்களை உடனடியாகக் கைது செய்து விசாரணை செய்ததில், மும்பையின் பல பகுதிகளிலும் இருக்கும் வீடுகளின் டிவிக்களில் வீட்டிலிருப்பவர்கள் பார்த்தாலும், இல்லையென்றாலும் குறிப்பிட்ட சேனல் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்படி செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு சன்மானமாக 400 முதல் 500 ரூபாய் வரையில் மாதம்தோறும் கொடுத்திருக்கிறார்கள்.
குற்றவாளிகள் கொடுத்த விவரத்தில் இருந்த வீடுகளுக்குச் சென்று விசாரித்தபோது, ஆங்கிலமே தெரியாதவர்கள் வசிக்கும் வீடுகளில் கூட ஆங்கில செய்தி சேனல்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளை கைது செய்தபோது கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொடுத்தவர்களைப் பற்றி விசாரித்தபோது மராத்தி மொழியில் ஒளிபரப்பாகும் ‘Fakt Marathi’ மற்றும் ‘Box Cinema’ ஆகிய சேனல் நிறுவனங்கள் பணம் கொடுத்தது தெரியவந்து, அவற்றின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊழலைக் கண்டுபிடித்த மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது “கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல நிறுவனங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். அவற்றின் வங்கிக் கணக்குகள் வரை அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. தொடர் விசாரணையில், ரிபப்ளிக் டிவி மாதிரியான முன்னணி நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் பணிபுரிபவர்கள் யார் இந்த ஊழலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும், அத்தனை பேரையும் விசாரணைக்கு அழைத்து உண்மையை வெளிக்கொண்டுவருவோம்” என்று கூறியிருக்கிறார்.
நேரடியாக ரிபப்ளிக் டிவி-யின் பெயரை பரம்பிர் சிங் கூறியதால், அதன் நிறுவனரான அர்னாப் கோஸ்வாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில் “புகார் கொடுக்கப்பட்ட எந்த இடத்திலும் ரிபப்ளிக் டிவியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், பரம்பிர் சிங் வேண்டுமென்றே எங்கள் பெயரைக் குறிப்பிடுகிறார். சுஷாந்த் சிங் மரணத்தில், கமிஷனரை நாங்கள் கேள்வி கேட்டதால் பழிவாங்கும் நோக்கத்துடன் இப்படி செயல்படுகிறார். உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும்” என்று கூறியிருக்கிறார் அர்னாப்.
அர்னாப் கூறுவது போல பரம்பிர் சிங்குக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் இடையே சுஷாந்த் மரணத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது உண்மை. சுஷாந்தின் மரணம் தற்கொலைதான் என்று சிபிஐ விசாரணையிலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்விலும் தெரியவந்ததன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கு முடிந்த சில தினங்களிலேயே ஊடக நிறுவனங்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளும், விசாரணைகளும் கிளம்புவது சந்தேகத்திற்கு இடம் அளிக்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்கில் பணத்துக்காக சில தில்லுமுல்லு வேலைகளை சிலர் செய்திருப்பது உண்மை என தெரிய வந்திருப்பதால் குற்றவாளிகளின் மூலம் பேசப்படும் ஊடகங்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது இயல்பு. மிக முக்கியமாக, அதிக பணம் புரளும் இடத்தில் தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நோக்கிலும், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இதுபோன்ற விளம்பரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியம் என்பதால் போலீஸ் விசாரணை செய்யவேண்டியது அவர்களின் கடமையாகிறது. குற்றவாளிகளின் வாக்குமூலத்தில் இந்த கருப்பு பண விவகாரம் இடம்பெற்றிருப்பதால் அரசாங்கத்தின் உதவியோடு இந்த விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் காவல் துறையினர்.
முக்கியமாக சுஷாந்த் மரணத்தில் ஊடகங்கள் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக தற்போது வெளிக்கொண்டு வருகின்றனர். செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம்(NBSA), சுஷாந்த் மரணத்தில் கட்டுப்பாடுகளை மீறி செய்தி ஒளிபரப்பிய நிறுவனங்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் பிரபலமான ‘ஆஜ் டக்’ சேனல் சுஷாந்த் பற்றிய போலி ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு இருந்தது. இறந்தவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த செயல் அமைந்ததால் அந்நிறுவனத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, தங்கள் சேனலில் மன்னிப்பு வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஜீ நியூஸில் ‘பாட்னாவில் இருந்து வந்த சுஷாந்த் மும்பையில் தோற்றுவிட்டார்’ என்ற அர்த்தத்தில் செய்தி வெளியிடப்பட்டது. தற்கொலையை தோல்வி என்றும் பாட்னா மாதிரியான சாதாரண ஊரில் இருந்து வந்து மும்பை மாதிரியான மெட்ரோ நகரத்தில் இறந்தது தோல்வி எனும் வகையிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டு அவர்களையும் மன்னிப்பு கேட்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி பல மீடியா நிறுவனங்களை இந்த ஆணையம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தாலும், ரிபப்ளிக் டிவி இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாதது. அந்தக் காரணம் மிகப் பெரிய கதை.
NBSA அமைப்பு, இந்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால் இந்த அமைப்பினாலும் ரிபப்ளிக் டிவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. 2019ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ரிபப்ளிக் டிவியில் “Congress Bharat Mata Claim” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பங்குபெற்ற இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த விருந்தினரை ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லும்படி அர்னாப் வற்புறுத்தினார். இதனை கண்டித்து மார்ச் 13ஆம் தேதி சரத் ஷா என்பவர் NBSA அமைப்பில் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த NBSA அமைப்பு, ரிபப்ளிக் டிவி-க்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் “நிகழ்ச்சியில் பங்குபெற்ற விருந்தினரை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரது கருத்துக்கு மாறாக ஒரு கருத்தினை சொல்லும்படியும், தொகுப்பாளர் என்ன நினைக்கிறாரோ அதனை செய்யும்படியும் வற்புறுத்தியது தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறானது” என்று கூறி இரு தரப்பினரையும் ஜூன் 14 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்தது. ஆனால் இந்த விசாரணைக்கு வர மறுத்தது ரிபப்ளிக் டிவி. ஜூலை 10 ஆம் தேதி இந்த விசாரணைக்கு வர முடியாது என்றும் இது ஒரு அர்த்தமில்லாத புகார் என்றும் உதாசீனப்படுத்தியது. ரிபப்ளிக் டிவி-யை எப்படி கையாள்வது என NBSA அமைப்பு யோசித்துக்கொண்டிருந்தபோது ஜூலை 29 ஆம் தேதி NBF(News Broadcasters Federation) என்ற புதிய அமைப்பு 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்டு தொடங்கப்பட்டது.
சட்டரீதியிலான குழப்பங்கள் கேள்விகள் அனைத்தையும் தீர்த்துக்கொண்டு NBSA மீண்டும் அக்டோபர் 7ஆம் தேதி ரிபப்ளிக் டிவி-யிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னது. அப்போதும் ரிபப்ளிக் டிவி அசையவில்லை. திடீரென நவம்பர் 4 ஆம் தேதி News Broadcasters Federation Authority (NBFA) என்ற செய்தி தரநிர்ணய ஆணையம் ஒன்றினை NBF உருவாக்கியது. போட்டி, வாக்கெடுப்பு என எதுவுமே இல்லாமல் NBFA அமைப்பின் தலைவராக அர்னாப் நியமிக்கப்பட்டார். NBSA அமைப்பின் விதிமுறைகள் தவறாக இருப்பதாக சுட்டிக்காட்டி, எந்தத் தவறுகளும் இல்லாத அமைப்பாக, தங்களுக்கான தர நிர்ணயம் செய்யும் வேலைகளை NBFA மூலம், NBF செய்துகொள்ளும் என அந்த அமைப்பினால் கூறப்பட்டது. NBF மற்றும் NBFA அமைப்பில் சேர்ந்த பலரும், இந்தியாவை ஆளும் பாஜக கட்சி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கமான தொழிலதிபர்களை நிறுவனராக கொண்ட ஊடகங்கள் என்பதால் நடுநிலை ஊடகங்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்ட பல ஊடக நிறுவனங்கள் அங்கு சேரவில்லை. ஆனால், அர்னாப் உருவாக்கிய NBF அமைப்பு வெகுவேகமாக வளர்ந்தது. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஊடக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு வழங்க வேண்டி கோரிக்கை வைத்துவிட்டு வந்தனர் அந்த அமைப்பினர்.
கருத்து சுதந்திரம், ஊடக அறம், தனி மனித உரிமை இப்படி எவற்றையும் இதுவரை மதிக்காத அர்னாப் கோஸ்வாமி, போலீஸ் விசாரணை என்றதும் எதற்காக மானநஷ்ட வழக்கு தொடர்வதாக பேச வேண்டும் என்று இந்தியா முழுவதுமே இப்போது ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ரிபப்ளிக் டிவி மீது மும்பை கமிஷனர் சந்தேகப்படுவது குறித்து இந்திய ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் “வீடுகளில் இப்படிப்பட்ட கருவிகளைப் பொருத்தி தவறு செய்வது நீண்ட கால பிரச்சனையாக இருக்கிறது. இதனை எப்போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நேர்மையுடன் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஊடக நிறுவனங்கள் சரியாக செயல்படுவதைக் கண்காணிக்க நாங்கள் இங்கே இருக்கிறோம். ‘இந்தியா எதைப் பார்க்கிறது?’ என்று நேர்மையாக எடுத்துச் சொல்வதே எங்கள் பணி. அதற்கு மும்பை போலீஸ் என்ன உதவி கேட்டாலும் செய்து கொடுப்போம்” என்று கூறியிருக்கிறது. எனவே, தற்போது போலீஸ் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு நீதிமன்ற படிக்கட்டுகளை அர்னாப் ஏறுவதற்குக் காரணம், தான் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் இல்லை எனும் உண்மை தான். ரிபப்ளிக் டிவி-க்கு எதிரான பரம்பிர் சிங்கின் குற்றச்சாட்டில் உண்மையும், அதற்கான ஆதாரமும் இருந்தால் நீதிமன்ற உதவியுடன் அர்னாப் கோஸ்வாமியும், அவரது ரிபப்ளிக் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இல்லையென்றால், வழக்கம்போல பரம்பிர் சிங்கையும், மும்பையின் ஆளுங்கட்சியையும் பிரைம்டைமில் என்ன செய்வார் என்று நாம் சொல்லவேண்டியதில்லை. இந்த தேசம் மட்டுமல்ல இந்த உலகமே இப்போது ‘டிஆர்பி ரேட்டிங் ஊழல்’ உண்மைக்காக காத்திருக்கிறது
**மதன்**
�,”