மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 14) நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்க அன்பழகனின் படத்தைத் திறந்து வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், இனமான பேராசிரியர் என கலைஞரால் அன்போடு அழைக்கப்பட்டவருமான க.அன்பழகன் கடந்த மார்ச் 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியரின் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லீம் லீக், உள்ளிட்ட கட்சி தலைவர்களும், தோழமை இயக்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். பேராசிரியரின் குடும்பத்தாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
**கவிபிரியா**�,