அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாளை தொடங்குவதை ஒட்டி சசிகலா இன்று (அக்டோபர் 16) சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்கிறார். சிறையில் இருந்து அவர் விடுதலையான பின் முதல் முறையாக அவர் மெரினா செல்கிறார்.
2021 பிப்ரவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த சசிகலா நேராக ஜெயலலிதா சமாதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி, பராமரிப்பு காரணங்கள் சொல்லி ஜெயலலிதா சமாதியை மூடினார்,
ஆட்சி மாறியது, கொரானா பரவல் குறைந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஐம்பதாவது ஆண்டு துவக்க விழா என்பதால் இன்று அக்டோபர் 16ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதிக்குச் செல்ல திட்டமிட்ட சசிகலா, தமிழகம் முழுவதுமுள்ள ஆதரவாளர்களுக்கு அழைப்பும் கொடுத்துள்ளார். இதற்காக அமமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆக அமமுக மூலம் தொண்டர்களை திரட்ட உத்தரவிட்ட சசிகலா தன்னோடு தினகரனை வரவேண்டாம் என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனால், நானும் உங்களோடு வருகிறேன் என்று தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஏற்கனவே காவல்துறைக்கு சசிகலா முறைப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து சசிகலா மெரினாவுக்கு வரும்போது எவ்வளவு கூட்டம் வரும் என்று சென்னை மாநகர போலீஸார், டிஜிபி மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கணக்கு எடுத்தார்கள். சென்னை மாநகரப் போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி மெரினாவுக்கு ஐந்தாயிரம் பேர் வருவார்கள் என்று ரிப்போர்ட் கொடுத்திருந்தனர். உளவுத்துறை கூடுதல் டிஜிபி மாவட்டந்தோறும் உள்ள எஸ்பிசிஐடி போலீஸார் மூலமாக வேன் மற்றும் கார் ஓட்டுநர் உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்களிடம் எவ்வளவு வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை எடுத்துள்ளார்.
அதில், வடமாவட்டங்களில் இருந்து அதிமுகவுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதைவிட அதிகமாக சசிகலாவுக்குத்தான் வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்றும் தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான பஸ் வேன் மற்றும் கார்கள் வருகிறது என்றும் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. நேற்று இரவு முதலே ரயில்கள் மூலமாகவும் பஸ்கள் மூலமாகவும் வரத்துவங்கிவிட்டார்கள், ஆனால் மேற்கு மாவட்டத்திலிருந்து மிக மிக குறைவாகவே ஆட்கள் வருகிறார்கள்.
சசிகலா தனக்கு பாதுகாப்பு கேட்டு வைத்த கோரிக்கை பற்றி காவல்துறை அதிகாரிகள் முதல்வரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். கூட்டத்தைப் பற்றி கிடைத்திருக்கும் தகவல்களையும் முதல்வருக்கு தெரியப்படுத்தினார்கள். அப்போது, “ சசிகலா வரும்போது ட்ராபிக் ஜாம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அவங்களுக்கு போதுமான பாதுகாப்புகள் கொடுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி இன்று (அக்டோபர் 16) காலை 8 மணி முதல் ஒரு ஏசி தலைமையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு டீம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமாதி அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் ஜெ நினைவிடத்துக்கு வர சசிகலா வருவதாகத் திட்டமிட்டுள்ளார். கூட்டம் அதிகமானால் சசிகலா கார் மெதுவாக நகரும். இதனால் தாமதமாகலாம் என்கிறார்கள் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார்.
சசிகலாவின் இந்நிகழ்வை ஜெயா டிவி லைவ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக ஜெயா டிவி நிருபர்கள் கூட்டமும் நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள். சசிகலா முதன் முறையாக இன்று பத்திரிகையாளர்களையும் சந்திக்க வாய்ப்பிருப்பதால் கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தைப்பற்றி வாய் திறப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
2017இல் ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் எடுத்துவிட்டு சிறைக்குச் சென்றவர், 56 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மெரினாவுக்கு வருகிறார். இதன் அதிர்வுகள் விரைவிலேயே அதிமுகவில் எதிரொலிக்கும்.
**-வணங்காமுடி**
�,