தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டாவது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு கேள்வி எழுப்ப வாய்ப்பு அளிக்கப்பட்ட போது அவர் முதல்வரைப் புகழ்ந்து பேசினார்.
“வரலாற்றுப் போற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தோன்றிய கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியிருக்கும் மாண்பாளர், உலக தமிழர்கள் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரை வணங்கி, இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் தமிழக மக்களின் பாதுகாவலரும், தமிழ் மொழியின் பாதுகாவலரும், கலைஞர் அவர்களால் உழைப்பு, உழைப்பு எனப் பாராட்டைப் பெற்றவரும், அரசியலின் போராளியும், சட்டத்தின் போராளியும், தமிழகத்துக்கு விடியலைத் தந்தவருமான முதலமைச்சர் ஸ்டாலின்” எனப் பாராட்டி வணக்கம் தெரிவித்தார்.
உடனே எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி வரிசையிலிருந்த போதும் பல முறை சொல்லியிருக்கிறேன். கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன். புகழ்வதற்கோ, பெருமைப்படுத்திப் பேசுவதற்கோ பயன்படுத்த வேண்டாம், புகழ்ந்து பேசி கேள்வி நேரத்தை வீணடிக்க வேண்டாம் ” என்று அறிவுறுத்தினார்.
**-பிரியா**