தாய்மொழியில் உயர்கல்வி : வெங்கையா நாயுடு பாராட்டு!

Published On:

| By Balaji

14 பொறியியல் கல்லூரிகள் மாநில மொழிகளில் பட்டப்படிப்புகள் வழங்குவதைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழுமம் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது.தாய்மொழியில் உயர் கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 21) ‘தாய் மொழியில் பொறியியல் படிப்புகள் – சரியான நடவடிக்கை’ என்ற தலைப்பில் தனது கருத்துகளைக் குடியரசுத் துணைத் தலைவர் பதிவிட்டுள்ளார். தமிழ் உட்பட 11 இந்திய மொழிகளில் தனது கருத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அசாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பி.டெக் படிப்புகளை நடத்த அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 8 மாநிலங்களில் 14 பொறியியல் கல்லூரிகள், புதிய கல்வியாண்டிலிருந்து தாய் மொழியில் பட்டப்படிப்புகள் வழங்க எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் என அனைத்து தொழில் படிப்புகளும் தாய் மொழியில் கற்பிக்கப்படும் நாளை பார்ப்பது எனது ஆசை.

தாய்மொழியில் கற்பது ஒருவரின் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கும். ஒரு பாடத்தை மற்றொரு மொழியில் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் முதலில் அந்த மொழியை கற்று புலமை பெற வேண்டும். அதற்கு அதிக முயற்சிகள் தேவை. ஆனால், தாய் மொழியில் கற்பதற்கு அந்த முயற்சிகள் தேவை இல்லை.

இந்தியா நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான வட்டார மொழிகளின் தாய்நாடாக உள்ளது. நமது தாய் மொழியுடன், நாம் தொப்புள் கொடி உறவைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கு அது மிகவும் சிறப்பானது.

உலகளவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்து வருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் 196 இந்திய மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. நமது சொந்த மொழியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் பன்முக அணுகுமுறை தேவை. மக்கள் முடிந்த அளவு அதிக மொழிகளைக் கற்க வேண்டும். பின்னி பிணையப்பட்ட இன்றைய உலகில் பல மொழிகளில் புலமை பெற்றிருப்பது, சிறப்பானது. ஒவ்வொரு மொழியை நாம் கற்கும்போது, நாம் மற்ற கலாச்சாரத்துடனான தொடர்பை வலுப்படுத்துகிறோம்.

புதிய கல்விக்கொள்கை, 8ஆம் வகுப்பு வரையிலும் அல்லது அதற்கு பின்பும், தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியில் கற்பது, குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்கும் என உலகில் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அழியும் நிலையில் உள்ள மொழிகளைப் பாதுகாக்கும் திட்டம் , கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ், மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது. அரசால் மட்டும் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. நமது அழகான மொழிகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பும் முக்கியம். வீட்டில் மட்டும் அல்லாமல், முடிந்தளவு மக்கள் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். விரிவாகப் பயன்படுத்தும்போது மட்டும்தான், மொழிகள் செழித்து வளரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share