ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த தொகுப்பில், பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் ,ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம் ,மிளகாய் தூள் 100 கிராம், மல்லி தூள் 100 கிராம் ,கடுகு 100 கிராம் ,சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம் ,கடலைப் பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், ரவை ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ , உப்பு 500 கிராம் , துணி பை ஒன்று ஆகிய 20 பொருட்களுடன் கரும்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக ரூ.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட மேலாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளனர். இக்குழு பரிசுப் பொருள்கள் சரியாக மக்களைச் சென்று சேர்கிறதா, ஏதேனும் குளறுபடி நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் என்று தமிழ்நாடு அரசு இன்று(டிசம்பர் 4) தெரிவித்துள்ளது.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள 20 பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,