குடியரசுத் தலைவர் தேர்தல்- மம்தா அழைப்பு: ஸ்டாலின் ஆலோசனை!

Published On:

| By admin

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதுகுறித்த ஆலோசனைகள் தேசிய அளவில் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கின்றன.
ஆளுங்கட்சியான பாஜக தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கமும், அதற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இன்னொரு பக்கமும் குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்புகொண்டு வருகிறார். இதேபோல மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வரும் ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் மம்தா,.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பங்கு என்ன என்பது பற்றியும் அதில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூன் 12) அக்கட்சித் தலைமை நிலையமான அறிவாலயத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்கனவே மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எதிர்த்திருக்கிறார். நேற்று டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், “மம்தா பானா்ஜி எனக்கும் கடிதம் அனுப்பியிருப்பதை சமூக ஊடகம் மூலமாக தெரிந்துகொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக இடம், தேதி, நேரம் ஆகியவை தீா்மானிக்கப்பட்டு நடத்தப்படும். அந்த வகையில், ஏற்கெனவே டெல்லியில் வரும் 15-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன. ஆனால், மம்தா பானா்ஜி ஒருதலைபட்சமாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. மம்தாவின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்தும் தன் முனைப்பானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வதா, மம்தா கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வதா அல்லது இருவரையும் இணைக்கும் வகையில் செயல்படுவதா என்று அறிவாலயத்தில் இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share