விருத்தாசலத்தில் பிரேமலதா- விருகம்பாக்கத்தில் விஜயகாந்த்

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் தற்போது வரை இடம்பெற்றுள்ள தேமுதிக கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் பற்றிய அறிவிப்பை நேற்று (பிப்ரவரி 18) வெளியிட்டது.

அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில்,

“ தமிழகம், புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி மாலை 5 மணி வரை விருப்பமனு அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேமுதிகவினர் பலரும் விருப்ப மனு செய்ய தயாராகி வரும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிர்வாகிகள் விரும்பினால், கேப்டன் ஆணையிட்டால் நான் தேர்தலில் நிற்பேன் என்று சமீபத்தில் பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தோடு பிரேமலதாவும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.

விஜயகாந்த் முதன் முதலில் 2006 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற விருத்தாசலம் தொகுதியில் இப்போது பிரேமலதா நிற்கப் போகிறார் என்றும், அதேபோல விஜயகாந்த் சென்னையில் தன் வீடு அமைந்திருக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் நிற்கப் போவதாகவும் தேமுதிக தலைமைக் கழக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

**-வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share