முரளிதரன் வாழ்க்கைப் படம்: விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் 800 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அச்சு அசலாக முரளிதரன் போலவே இருந்தார் விஜய் சேதுபதி.

ஆனால், முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. விஜய் சேதுபதி அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை. அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அப்படி அறிந்த பிறகு அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர் முரளிதரன் எனச் சாடிய ராமதாஸ், ” உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்” என்றார்.

“தர்மதுரை படத்தில் கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன். ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்” என்று கூறியவர்,

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார் மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா எழுதிய கடிதத்தில், “மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது கடினம். ஆனால், பொதுமக்கள் வெகு வேகமாக உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். நம் ஈழப் பிள்ளைகள் செத்துவிழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா முரளிதரன். சிங்கள இனவாதத்தை முழுமையாக ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்படும்போது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா என்று கோரிக்கை விடுத்த பாரதிராஜா,

“எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய மடலில், “முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம், உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடியுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தாமரை எழுதிய கடிதத்தை தனது முகநூலில் பகிர்ந்த தவாக தலைவர் வேல்முருகன், கவிஞர் தாமரையின் மேற்கண்ட கருத்தை முழுமனதோடு ஏற்பதாகவும், நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் உலகத் தமிழினத்தின் வேண்டுகோளை ஏற்று விரைவில் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இல்லையெனில் இனிவரும் காலங்களில் இதற்கான எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்றும் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு சமூக வலைதளங்களிலும் எதிரொலித்து வருகிறது. விஜய் சேதுபதி அந்தத் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவற்றிற்கு பதிலளித்து 800 திரைப்படத்தின் தயாரிப்பாளர் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில், 800 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை என்றும், அதில் எந்த வித அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு நம்பிக்கை பாடமாக இருக்கும் என தெரிவித்துள்ள விவேக், ஈழ தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதமாக எந்த காட்சிகளும் இடம் பெறாது என்று உறுதியளித்துள்ளார். இலங்கை தமிழ் கலைஞர்கள் பலர் இந்த படத்தில் பணி புரிவதால் அவர்களின் திறமை உலக அளவில் வெளிவர 800 படம் அடிதளமிடும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share