yவன்னியர் இட ஒதுக்கீடு: இன்று பேச்சு வார்த்தை!

Published On:

| By Balaji

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் சமுதாயத்தினருக்கு, 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முடிவெடுத்தால்தான், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் முடிவெடுக்க முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 3) வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஜனவரி 31ஆம் தேதி பாமகவின் நிர்வாகக் குழு கூடியபோது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு தொடர்பான முடிவை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பாமக நிர்வாகக் குழு மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, வன்னியர் இடப்பங்கீடு குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் வராத நிலையில், அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினார்கள். அப்போது வன்னியர்களுக்கான இடப்பங்கீடு குறித்து தமிழக அரசு குழுவும், பாட்டாளி மக்கள் கட்சி குழுவும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சென்னையில் சந்தித்து பேசலாம் என்றும், அந்தப் பேச்சுகளின்போது வன்னியர் இடப்பங்கீடு குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் மருத்துவர் ராமதாஸிடம் அமைச்சர்கள் யோசனை தெரிவித்தனர்.

அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்த விவரங்கள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் மருத்துவர் ராமதாஸ் விளக்கினார். அதனடிப்படையில் நிர்வாகக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் முடிவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 3ஆம் தேதி அரசுடனான பேச்சுகளில் பங்கேற்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பேச்சுகளின் முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை மேற்கொள்வோம் என்று தீர்மானத்தில் கூறியிருந்தது பாமக.

அதன்படியே இன்று (பிப்ரவரி 3) நடக்க இருக்கும் பேச்சுவார்த்தை பற்றி அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை. பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share