]ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வரின் பயண விவரம்:

7.00 மணி: சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் புறப்படுதல்.

7.20 மணி: சென்னை விமான நிலையத்தை அடைதல்.

7.30 மணி: சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்படுதல்.

காலை10 மணி: டெல்லி விமான நிலையம் அடைதல்.

வரவேற்புக்குப் பின் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் செல்கிறார். அங்கே தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசனை, அதிகாரிகளுடன் ஆலோசனை, மதிய உணவு, ஓய்வு…

மாலை 5 மணி: டெல்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவருடன் சந்திப்பு.

பிரதமருடனான முதல்வரின் சந்திப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்து, சந்திப்பு முடிந்தவுடன் மாலை அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லம் செல்கிறார்.

இன்று இரவு டெல்லியில் தங்குகிறார். நாளை காலை டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பத்து வருடங்களுக்குப் பின் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்து முதல்வராகியுள்ள ஸ்டாலின் தனது முதல் டெல்லி பயணம் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகள், திட்டமிடல்களுக்குப் பிறகே டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியுஸ் கோயல் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். மேலும், கூட்டணி கட்சிகளின் தேசிய தலைவர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போன்றவர்களையும் சந்திக்கவும் ஸ்டாலினிடம் திட்டம் இருக்கிறது.

தனி விமானத்தில் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தனி செயலாளர்கள் டாக்டர் தினேஷ் குமார், உதயசந்திரன், உமாநாத், செல்வராஜ் ஆகியோர் டெல்லி புறப்படுகிறார்கள்.

முதல்வரின் டெல்லி பயணத் திட்டத்தையும், பாதுகாப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்ள மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லிக்குச் சென்றுவிட்டார். பிரதமர் அலுவலகப் பாதுகாப்பு அதிகாரிகள், டெல்லி போலீஸ் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார். ஒவ்வொரு சந்திப்பின் போதும் போக்குவரத்து, பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அவர் டெல்லி அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

**-வணங்காமுடி வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share