திமுக அரசும் ஆளுநருக்கு அடிமையா? தலைமைச் செயலாளர் விளக்கம்!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் ஆளுநருக்கு அறிக்கை அளிப்பதற்காக தகவல்களை தயார் செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் திமுக அரசின் மீது விமர்சனக் கணைகள் பாய்ந்த நிலையில் இன்று (அக்டோபர் 26) தலைமைச் செயலாளர் இறையன்பு அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி ஆளுநர்களின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. போராட்டங்களும் நடத்தின.

சசிகலா சிறைக்குச் சென்றபிறகு டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் இணைத்து வைத்து அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கொடுத்த போஸ் தமிழ்நாடு அரசியலில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். அவர் வந்ததுமே அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாறி திமுக ஆளுங்கட்சியானது. மு.க.ஸ்டாலின் முதல்வரானார். ஆட்சி மாறிய ஆறு மாதங்களுக்குள் கடந்த செப்டம்பர் மாதம், ஆளுநர் பன்வாரிலால் பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டு, புதிய ஆளுநரான ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதுமே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.

“ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னாவைச் சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். உதாரணத்துக்கு, முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண் பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது. அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைச் செயல்படவிடாமல் நித்தம் இடையூறு செய்து மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை, கடும் எதிர்ப்பு காரணமாக மோடி அரசு திரும்பப் பெற்றது. அந்தவகையில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண் பேடி செய்த இடையூறுகளால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனது. அதேபோன்ற நிலை தமிழகத்திலும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார் அழகிரி.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை செய்தார். இதுவும் விவாதத்துக்குள்ளானது.

இந்தப் பின்னணியில் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்துத் துறை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், “மாநிலத்தில் அனைத்துத் துறைகளிலும் நடக்கும் ஒன்றிய, மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் அறிய விரும்புகிறார். அதற்காக அவருக்கு பவர் பாயிண்ட் ப்ரசன்டேஷன் அளிக்க வேண்டும். அதற்கான தகவல்களை தயாராக வைத்திருக்கவும். இதுகுறித்த தேதியை பின்னர் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

“அதிமுக ஆட்சியிலாவது ஆளுநர் தேடிச் சென்று ஆய்வு செய்தார். ஆனால் திமுக ஆட்சியில் ஆளுநரைத் தேடியே அரசுத் துறைகளின் விவரங்களைக் கொண்டுபோய் கொடுக்கிறார்கள்” என்று சமூக தளங்களில் விமர்சனங்கள் எழும்பின.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்து இன்று (அக்டோபர் 25) ஓர் விளக்கத்தை அளித்திருக்கிறார்.

அதில், “அலுவல் ரீதியாக துறைச் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாகியிருக்கிறது. இதுபோல தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானதுதான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்பது தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார் தலைமைச் செயலாளர்.

**வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share