மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மை, நீதி, அகிம்சை வெற்றி பெற்றுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அதுபோன்று, இந்த அறிவிப்பின் மூலம் பாஜக அரசு தவறை உணர்ந்துகொண்டது என்பதல்ல என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் கருத்தும் கூறிவரும் நிலையில், சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. நீதிக்கான இந்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. உண்மை நீதி அகிம்சை வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்க விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். ஒட்டுமொத்த முயற்சியும் இன்று வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவிமடுக்காத அரசு எதிர்வரும் மாநில தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவின் பொருள் பாஜக அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள்.
இடைத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது போலத்தான் இந்த முடிவும். மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பாஜக அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயம் இருந்தால், பணமதிப்பழிப்பு ஒரு இமாலய தவறு என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் பிரதமர் மோடி.
அதுபோன்று ஜிஎஸ்டி சட்டங்கள் மோசமான வரைவு மற்றும் விரோதமான முறையில் செயல்படுத்தப்பட்டன என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள். சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஒரு வெளிப்படையான பாரபட்சமான சட்டம் என்றும் ஒப்புக் கொள்ளுங்கள். அதேபோல், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் நேர்மையற்றது என்பதையும் ஒப்புக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**
�,