வரும் ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில், ஜனவரி 5ஆம் தேதி, காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆளுநர் உரையைத் தொடர்ந்து பொது பட்ஜெட், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை நடைபெறும். கொரோனா விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். அரசும் சுகாதாரத் துறையும் இணைந்து, 83 சதவிகித பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போட்டுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசி 50 சதவிகிதத்துக்கும் மேல் போடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
100 சதவிகிதம் தொடுதிரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும். பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்
சபாநாயகர்கள் நிறைவேற்றிக் கொடுக்கும் தீர்மானம் கால தாமதம் இல்லாமல் சட்டமாக வேண்டும் என்று சிம்லாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் எனது கருத்தைத் தெரிவித்தேன். ஆனால், இதை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதி, ஆளுநரிடம் சொல்வது சபாநாயகர் வேலை இல்லை” என்று கூறினார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏப்ரல் 2020 முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிலையில், மீண்டும் தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,