சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு!

Published On:

| By Balaji

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின் படியான சலுகைகள், அவருக்கான விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் காரணமாக சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலையாவார் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் சசிகலாவின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு, அம்மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விதிமுறைகளை மீறிச் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக 2017ஆம் ஆண்டு அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

இந்த சிறப்பு சலுகைகளை பெற, பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்த குழு இன்னும் விசாரணை அறிக்கையை வழங்காத நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, சிறையில் இருக்கும் சசிகலா எம்.ஜி.ரோடு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்ததை பார்த்ததாக முத்து மாணிக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share