அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளரான சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் (ஜனவரி 20) அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் அவர், நேற்று (ஜனவரி 21) பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று இரவு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் அமமுக,அதிமுக என இரு கட்சிகளிலும் உள்ள சசிகலா விசுவாசிகள் அவரது உடல்நிலை பற்றி அறிந்து கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
சசிகலா கட்சியில் செல்வாக்காக இருந்த கால கட்டத்தில் அவரால் அமைச்சர் பதவி பெற்றவர்கள் அதிகம். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பல எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சசிகலா சிபாரிசால் தான் அந்தப் பதவிக்கு வந்தார்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு அவர்களே இப்போது வரைக்கும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சசிகலாவின் ஹெல்த் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அவரது குடும்பத்திலுள்ள திவாகரன், வெங்கடேஷ், விவேக், ராவணன் உள்ளிட்டோரிடம் வாட்ஸ் அப் காலில் பேசி வருகிறார்கள். பல எம்.எல்.ஏ.க்களும் மன்னார்குடி குடும்பத்தில் தங்களுக்குத் தொடர்பில் உள்ள புள்ளிகளுக்கு போன் செய்து, ‘சின்னம்மா எப்படி இருக்காங்க?விடுதலை ஆகி நல்லபடியா வந்துடுவாங்கனு நினைச்சோம். ஆனால் இப்படி தகவல் வருதே’என்று கவலை தோய்ந்த குரலில் பேசி வருகிறார்கள்.
குறிப்பாக வேட சந்தூர் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம், சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷுக்கு நெருக்கமானவர் என கருதப்படுபவர். அவர் வெங்கடேஷுக்கு போன் செய்து மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவின் உடல் நிலை பற்றி அக்கறையாக விசாரித்துள்ளதாக எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
சசிகலாவின் உடல் நலம் பற்றி விசாரிக்கும் பலரும் தினகரனுக்கு போன் பண்ணுவதில்லை. அவர் போனை எடுப்பதில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம். நாளை ஏதாவது ஒரு பிரஸ்மீட்டில் தங்களது பெயரையெல்லாம் போட்டு உடைத்துவிடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வும் ஒரு காரணம்.
தனி மனித அக்கறையில் கூட எவ்வளவு தூரம் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறது அதிமுகவில்!
**-வேந்தன்**�,