கேரள ஆயுர்வேத வைத்தியசாலையில் ராஜேந்திரபாலாஜி?

politics

பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட போலீசாரின் தனிப்படைகள் தேடி வரும் நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அன்று விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த ஆர்பாட்டத்தில் மாசெ என்கிற முறையில் கலந்துகொண்ட ராஜேந்திரபாலாஜி அதன் பின் தலைமைறைவாகிவிட்டார்.

இதற்கிடையே அன்று இரவே ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்களான ரமணன், வசந்தகுமார் மற்றும் ராஜேந்திரபாலாஜியின் டிரைவர் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் கூட்டிச் சென்று விசாரித்தனர்.

ராஜேந்திரபாலாஜிக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் அவரது சகோதரி மகன்கள்தான். அதனால் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள் போலீசார். இந்த நிலையில்தான் ராஜேந்திரபாலாஜிக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில அதிமுகவினரிடமும் போலீஸார் ரகசியமாக விசாரித்திருக்கின்றனர்.

அதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

‘ராஜேந்திரபாலாஜிக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. அவர் தினந்தோறும் மாத்திரை சாப்பிட்டு வருகிறவர். அதனால் சிறைக்குச் சென்றால் உடல் நிலை மோசமாகிவிடும் என்று பயப்படுகிறார். உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட உடனேயே தனது வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் விருதுநகரில் இருந்து டிசம்பர் 17 மதியம் 2 மணி வாக்கில் புறப்பட்டுவிட்டார். சமீபகாலமாக தான் வைத்திருக்கும் ஆண்டிராய்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வீட்டிலேயே போட்டுவிட்டு, பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படும் நம்பர் டைப் போன் ஒன்றில் புதிய சிம் கார்டு போட்டுக் கொண்டுதான் அவர் கிளம்பியிருக்கிறார்.

விருதுநகரில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து செங்கோட்டை, புளியரை சென்று திருவனந்தபுரம் போகும் ரூட்டில் போயிருக்கிறது ராஜேந்திரபாலாஜியின் வாகனம். அந்த ரூட்டில் ஒரு ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில்தான் இப்போது சிகிச்சையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. இந்தத் தகவல் ராஜேந்திரபாலாஜியை சுற்றியிருப்பவர்களிலேயே ஓரிருவருக்குத்தான் தெரியும். அவர்கள் மூலம் தகவலை அறிந்துகொண்டு கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் விசாரித்து வருகிறோம்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *