புதுச்சேரி மாநிலத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதந்த ராகுல், டெல்லிக்குத் திரும்பி செல்லும்போது கோபத்துடன் பயணித்துள்ளார்.
நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மூன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்திருந்தார். கடற்கரையில் மீனவ மக்களுடன் உரையாடல், கல்லூரி மாணவர்கள் வினாவுக்கு விடையளிப்பது, மாலையில் ஏ.எஃப்.டி.திடலில் பொதுக்கூட்டம் என மூன்று நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்துகொண்டு, மாலையில் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சென்னை உள் நாட்டு விமான நிலையம் சென்றார்.
அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாகப் பழைய விமானம் நிலையத்திற்குச் செல்லும்போது ராகுல் கான்வாய் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துள்ளது.
பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ராகுலுக்கு என்ன கோபம் ஏன் இப்படி வேகமாகப் போகிறார், வழிநெடுக நிற்கும் மக்களைக்கூடப் பார்க்காமல் இறுகிய முகத்துடன் போகிறார் என்று புலம்பினார்கள்.
ராகுல் கோபத்துக்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.
“புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழப்போவதுபற்றி ஃபீல் செய்துள்ளார். அதற்குக் காரணம் நாராயணசாமியின் பதவி ஆசையும், மேலிட பொறுப்பாளர்கள் உண்மைகளைச் சொல்லாமல் தலைமைக்கு மறைத்ததும்தான் என்று புதுச்சேரியிலேயே கோபமாகத்தான் இருந்தார் ராகுல். மேலும் ஒரு தனிநபருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால்தான் பல காங்கிரஸ் சீனியர்கள் வெளியேறுகிறார்கள் என்று தினேஷ் குண்டுராவிடம் கோபமாகப் பேசியுள்ளார் ராகுல். கார் வேகத்துக்கு அந்த கோபம்தான் காரணம்” என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.
**-வணங்காமுடி**�,