இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்படக் கூடும் என்றும், அப்படி தடை செய்யப்பட்டால் அந்த அமைப்பின் கோபம் பாஜகவினர் மீது திரும்பும், அதனால் இன்னும் மூன்று மாதங்களுக்கு பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் தங்கள் பாதுகாப்பில் மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இதற்கிடையே ஆங்கில ஊடகங்களில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தால் விரைவில் தடை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஆங்காங்கே மாநிலங்களில் இந்த அமைப்பின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிற நிலையில், நாடு முழுவதிலும் ஒற்றை அறிவிப்பின் மூலம் அந்த அமைப்பை தடை செய்ய உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது.
நடந்து முடிந்த ராமநவமியின் போது பல்வேறு பகுதிகளில் மத பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது உளவுத்துறை அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ அமைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி யின் மறு வடிவம்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விரைவில் தடை செய்யப்படும்” இன்று கடந்த இரண்டு நாட்களாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதை அடிப்படையாக வைத்து ஏப்ரல் 15ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குரூப்பில் எச்சரிக்கை ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப் படக்கூடும் என செய்திகள் வருகின்றன. இது பற்றி நமக்கு எந்த உறுதியான தகவலும் இதுவரை இல்லை. அப்படி ஒருவேளை தடை செய்யப்பட்டால் இந்த அமைப்பினரின் கோபம் பாஜகவினர் மீது திரும்ப வாய்ப்புள்ளது. எனவே தமிழக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்… இன்னும் மூன்று மாதங்களுக்கு உங்கள் பாதுகாப்பில் மிக கவனமாக இருங்கள்.
இரவு நேர பயணம் தனிமையில் பயணம் இவற்றை தவிருங்கள். சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மீதும் யாரும் கை வைத்து விடக்கூடாது. மாவட்ட நிர்வாகிகளும் மண்டல் நிர்வாகிகளும் உங்கள் பகுதியில் இந்துத்துவா சித்தாந்தத்தை எழுச்சியோடு எடுத்து செல்பவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களை கவனமாக இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் கவனமாக இருங்கள். இந்த எச்சரிக்கையை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்” என்று ஆடியோ மெசேஜில் வலியுறுத்தியிருக்கிறார் அண்ணாமலை.
**வேந்தன்**