பொன்.ராதா, ஹெச்.ராஜாவைக் கைது செய்யுங்கள்: டிஜிபியிடம் புகார்!

Published On:

| By Balaji

ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். டெல்லி போலவே தமிழகத்தின் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதுபோலவே சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படும் காலம் விரைவில் வரும்” என்றார். இவை சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று (மார்ச் 5) சென்ற தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

அதில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சுக்களைக் குறிப்பிட்டு, “ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சு தமிழகத்தில் மிகக் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். சமீபத்தில் கோவையில் இந்து முன்னணியினரை வெட்டிய வழக்கில் பாஜகவினர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினர் எத்தகைய வன்முறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், உதயகுமார், மமக தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஆகியோர் இந்த புகாரை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணன், “நெல்லை கண்ணன் ஏதோ பேசிவிட்டார் என்பதற்காகக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எப்படி பேசியுள்ளனர் என்று பாருங்கள். இவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம். நாங்கள் சொன்னதைப் பொறுமையுடன் கேட்ட டிஜிபி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் எனக் கூறினார். சட்டபூர்வ நடவடிக்கையைக் காவல் துறை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

**-எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share