தடுப்பூசி பற்றாக்குறை இந்தியா முழுதும் நிலவி வருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடுமையாகியிருக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடியிடம் பேச முயற்சித்ததாகவும் ஆனால், மோடி மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் பேச முடியவில்லை என்றும் அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடு முழுதும் கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலையில், பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 19) மத்திய அமைச்சரவையின் செயலாளர் அவசரமாக ஒரு வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும், ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிப்பது குறித்தும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில தலைமைச் செயலாளர்களோடும் அந்தந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளோடும் மத்திய அமைச்சரவை செயலாளர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
**-வேந்தன்**
�,