வெளி மார்க்கெட்டில் உபகரணங்கள்: வேளாண் துறையில் வில்லங்கம்!

Published On:

| By admin

அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் உபகரணங்களின் விலை அதிகமாக இருப்பதால், வெளிச்சந்தையிலேயே வாங்கிக்கொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து, தேவையான வேளாண் உபகரணங்களை மலிவு விலையில் வழங்க மானியம் வழங்கி வருகிறது. ஆனால், அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் குறைவான விலைக்கு உபகரணங்களைக் கொள்முதல் செய்து விவசாயிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்றும் அதிலும் மானியங்களைக் கழித்துக்கொண்டு, விவசாயிகளின் பங்களிப்பு தொகை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேளாண் துறை வட்டாரங்களில் இதுகுறித்து நாம் விசாரித்தபோது, 2021-2022 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11 கோடி, தோட்டக்கலைக்கு 5 கோடி, வேளாண் பொறியியல் கல்லூரிக்கு 211 கோடி என மொத்தம் 227 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கடந்த மே 23ஆம் தேதி கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள ஊராட்சிகளிலேயே தற்போது முதல்வர் தொடங்கி வைத்துள்ள கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் 1997 ஊராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், தார்ப்பாய்கள், வேளாண் உபகரணங்கள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில்தான் விவசாயிகள் ஏமாற்றப்படுவதாக குமுறுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமகவுண்டர் நம்மிடம் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளின் பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு நிதியை ஒதுக்கீடு செய்து கொள்ளையடித்து வருகிறார்கள் அதிகாரிகள். பயிர்களுக்கு மருந்து அடிக்கும் கை மெஷின் வெளி மார்க்கெட்டில் வாங்கினால் வெறும் 1,400 ரூபாய்தான். இந்த விலைக்கு மெஷினை விவசாயத் துறையினர் கொள்முதல் செய்து ரூ.2,650 என்று அதிக விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதில், மானியம் 750 ரூபாய் போக, 1,900 ரூபாயான பயனாளிகளின் பங்களிப்பைச் செலுத்திவிட்டு மெஷினை வாங்கிச் செல்லுங்கள் என்று திணிக்கிறார்கள். மானியத்தோடு கொடுப்பதாகச் சொல்லும் இந்த மெஷினை வெளிமார்கெட் விலையை விட 500 ரூபாய் அதிகம் கொடுத்து நாங்கள் வாங்க வேண்டுமா?
இதேபோல, பேட்டரியில் இயங்கக்கூடிய மருந்து அடிக்கும் மெஷின் வெளி மார்க்கெட்டில் 2,500 ரூபாய்தான். ஆனால், விவசாயத் துறையினர் 5,800 ரூபாய் விலை வைத்து விற்கின்றனர். மானியம் 2,500 ரூபாய் போக மீதமுள்ள 3,000 ரூபாயைச் செலுத்தி மெஷினை வாங்கச் சொல்கிறார்கள். 2,000 ரூபாய் மதிப்புள்ள தார்ப்பாயை 5,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து மானியம் போக 2500 கொடுத்துவிட்டு வாங்கி செல்லுங்கள் என்கிறார்கள்.
இதனால் விவசாயிகள் பலர் விவசாயத் துறை கொடுக்கும் கருவிகளை வாங்காமல் மறுத்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஒன்றிய விவசாயத் துறை அதிகாரிகளும் பெரு விவசாயிகளைத் தேடிச் சென்று டிராக்டர், நெல் அறுவடை செய்யும் மெஷின் வாங்கினால் லட்சக்கணக்கில் மானியம் கிடைக்கும். இப்படி மானியம் கிடைக்கக் கூடிய டிராக்டர் அல்லது நெல் அறுவடை மெஷின் வாங்க வேண்டுமானால்… மருந்து அடிக்கிற மெஷினும், தார்ப்பாயும் வாங்குங்கள் என்று போராடி வருகிறார்கள். இதுபோன்ற ஊழலை ஒழிக்க, விவசாய கருவிகளுக்கு வழங்கக்கூடிய மானியங்களை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசே நேரடியாகச் செலுத்த வேண்டும்” என்று வேதனைப்பட்டார்.


தருமபுரி மாவட்டம் இருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஐ.கே.முருகன், “மானிய விலையில், 2 அரிவாள், கடப்பாரை, இரும்புசட்டி, மண்வெட்டி, களைக்கொத்தி, கருக்கு அரிவாள் என ஏழு பொருட்கள் அடங்கிய ஒரு கிட் கொடுக்கிறார்கள். அதன் விலையை ரூ.3,000 என்று நிர்ணயம் செய்து மானியத்தைக் கழித்துக்கொண்டு மீத பணத்தைக் கொடுங்கள் என்று அநியாயமாக வசூலித்தார்கள். அதன் உண்மையான விலை 1,820 ரூபாய்தான். இனியும் விவசாயிகளை நசுக்க வேண்டாம்” என்றார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளைப் பற்றி வேளாண் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐஏஎஸ்ஸிடம் தொடர்புகொண்டு கேட்டோம். வேளாண் உபகரணங்களின் வெளி மார்க்கெட் விலையையும், அரசு நிர்ணயித்த விலையையும் அவரிடம் தெரிவித்துப் பேசினோம்.
அவர் கூறுகையில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டிக்கு தலைவராக இருப்பவர் மாவட்ட ஆட்சியர்தான். அந்த கமிட்டிதான் டெண்டர் மூலமாகக் கொள்முதல் செய்கிறது. நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

*சி.சமயமூர்த்தி ஐஏஎஸ்*

குறிப்பாக மண்வெட்டி, கடப்பாரை, கத்தி, களைக்கொத்து உட்பட ஏழு பொருட்களின் விலையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்களே என கேள்வி எழுப்பினோம். இதற்கு அவர், “இந்த ஏழு பொருட்கள அடங்கிய கிட் இதுவரை 60,000விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் மண்வெட்டி மட்டும் கையாள்வதில் சிரமமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. அது வட மாநிலத்தில் பயன்படுத்தக்கூடிய மண்வெட்டி. அதிலும் குளறுபடி இருக்கிறது என்றால் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் நலன் கருதி நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதில் தவறு நடக்க அனுமதிக்க மாட்டோம்” என்று பதிலளித்தார்.

**-வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share