இரண்டில் ஒன்று சூரியன்: ஜவாஹிருல்லாவின் திடீர் மடல்!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும், ஒன்றில் தனி சின்னத்திலும் நிற்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமக நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது இரு தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதுகுறித்து கட்சியிலும், சமுதாயத்திலும் மமக தலைமை மீது விமர்சனங்கள் அதிகமாகி வருகின்றன.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின், ‘சமுதாயக் கண்மணிகளுக்கு திறந்த மடல்’என்ற பெயரில் ஒரு பொது கடிதம் வெளியிட்டுள்ளார் ஜவாஹிருல்லா. அதில் இரு தொகுதிகள் வாங்கியதற்கு காரணம் என்ன என்று விளக்கும்போதே….இன்னொரு முக்கியமான பிரச்சினையான சின்னம் தொடர்பான விவகாரத்தை இரண்டே வார்த்தைகளில் அடைப்புக்குறிக்குள் சொல்லிவிட்டுக் கடந்துவிட்டார் ஜவாஹிருல்லா. இது அவர் மீதான இஸ்லாமிய சமுதாயத்தின் விமர்சனத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

அந்த மடலில் ஜவாஹிருல்லா, “திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி செய்து கொண்ட 2021 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பகிர்வு உடன்பாடு குறித்து, பல்வேறு கருத்துகளை பதிவுச் செய்து உள்ளீர்கள். அத்தனையும் நான் உள்வாங்கி கொண்டேன். நமக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்கள் நமது அமைப்பு மற்றும் கட்சியின் பலத்திற்கு இணையாக அமையவில்லை என்ற உங்கள் ஆதங்கம் நியாயமானது. அதுவே தலைமையின் எண்ணமும் கூட. ஆனால் 2021ல் நாம் சந்திக்கும் சட்டமன்றத் தேர்தல் முன்பு நடைபெற்றது போன்ற தேர்தல் அல்ல.

தமிழகத்தில் சங்கிகளின் ஆதிக்கம் வெகுவாக வளர்ந்து விட்ட நிலையில் அவர்கள் எப்படியாவது ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் சந்திக்கும் தேர்தல்.

நாம் வளர்ந்து விட கூடாது நாம் அதிகாரம் பெற்று விடக் கூடாது என்ற எண்ணம் சங்கிகளுக்கு மட்டும் அல்ல. துரோகிகளுக்கும் உண்டு. இந்த நிலையில் நாம் திமுக தலைமையுடன் முடிந்த அளவு கூடுதல் இடங்களுக்காக கடுமையாக வாதிட்டோம். ஆனால் இந்த 2 இடங்களை விட கூடுதலாக நாம் பெற இயலவில்லை. (இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று நமது சின்னத்தில் மற்றொன்று சூரியன் சின்னத்தில்)” என்று இரு தொகுதிகள் பெற்ற காரணத்தை சொல்லிக் கொண்டே அப்படியே சின்னம் தொடர்பான முக்கிய தகவலையும் இணைத்துவிட்டிருக்கிறார் ஜவாஹிருல்லா.

மேலும், “இந்த நிலையில் 2009ல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் உணர்ச்சி வசப்பட்டது போல் இப்போதும் உணர்ச்சி வசப்பட்டால் என்னவாகும் என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள். 2 சீட்டும் வேண்டாம். தார்மீக ஆதரவு மட்டும் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் சமுதாய ரீதியான நிகழ்வுகளில் அரசியல் அதிகாரமற்ற நிலையில் நாம் மிக பலவீனமானமானவர்கள் ஆகிவிட நேரிடும்.

CAA சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற உதவிய அதிமுக, இக்கொடூர சட்டத்தை கொண்டு வந்த பாஜக, இதற்கு துணை நின்ற பாமக ஆகிய கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தேர்தல் தான் ஏப்ரல் 6, 2021 தேர்தல்.

அந்த நெருக்கடியான காலகட்டத்தில் நம்மோடு தோளோடு தோள் நின்று குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு கொண்டு வந்த NPR ஐ ஏற்க மாட்டோம் என உறுதியாக அறிவித்தது திமுக என்பதையும் நாம் நினைவு கூரவேண்டும்.

எனவே, சமுதாயத்தின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றவும், தமிழகத்தை கலவரக்காடாக மாற்ற நினைக்கும் சங்பரிவார வெறுப்பு அரசியலை எதிர்ப்பதற்கும் களம் அமைக்கும் இந்த தேர்தலில், மனமாச்சரியங்களைத் தூர எறிந்துவிட்டு, உற்சாகத்துடனும் ,உத்வேகத்துடனும் களத்திற்கு வாருங்கள். நமது அணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் நிலையில் மேலும் வீரியமாக பட்டிதொட்டியெங்கும் நமது அமைப்பை கட்டமைத்து மேலும் சிறப்பாக வலுப்படுத்தி சமுதாயத்தின் உரிமைகளை தமிழக மக்களின் உரிமைகளை இன்ஷா அல்லாஹ் நிலை நாட்டுவோம்”என்று அந்த மடலை முடித்துள்ளார் ஜவாஹிருல்லா.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share