அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு!

Published On:

| By Balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011- 2013ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், அமைச்சர் ராஜபாளையம் அருகே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 66 கோடி ரூபாய் எனவும், அதுபோன்று திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு இரண்டு வீட்டு மனைகளும், ரூ. 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் மீதான வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில் மகேந்திரன் இவ்விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி 1996 ஆம் ஆண்டு முதல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்துத் துணைத் தலைவராக இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்களைக் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிந்து ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆனால் நீதிபதி ஹேமலதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share