234 கலசம்: வெற்றிக்காக அமைச்சர் செய்த யாகம்!

politics

வாக்கு எண்ணிக்கை தேதியான மே 2 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதிமுக தரப்பிலும் நம்பிக்கையாகவே இருக்கிறார்கள். மீண்டும் ஆட்சியை நாம்தான் கைப்பற்றப் போகிறோம் என்று தன்னை சந்திப்பவர்களிடமெல்லாம் ஒரு சில கணக்குகளைச் சொல்லி நம்பிக்கை வார்த்தைகளைப் பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்க வேண்டுமென்ற வேண்டுதலோடு கொல்லிமலையில் ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார் அமைச்சர் ஒருவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எல்லாருமே ஆன்மீகத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்நிலையில்தான் அதே ஆன்மீக வழியில் மீண்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சரான எம் சி சம்பத். சித்தர்கள், ஞானிகள், யோகிகள் வாழ்ந்த மண் என்பதால் இந்த யாகத்தை நடத்த கொல்லிமலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 21ஆம் தேதி, வியாழக்கிழமை காலையில் ஜெயலலிதாவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் இந்த யாகத்தைத் தொடங்கினார் அமைச்சர் சம்பத். தலைக் காவிரி தீர்த்தம், காசி தீர்த்தம், திருக்கைலாயம் தீர்த்தங்களை சேகரித்து இந்த யாகத்துக்காக கொண்டு வந்திருக்கிறார்கள். 108 மண் கலசம், 108 பித்தளைக் கலசம், 9 வெள்ளி கலசம், 2 தங்கக் கலசம் மற்றும் செப்பு கலசங்களை வைத்து ஆக 234 தொகுதிகளைக் குறிக்கும் வகையில் 234 கலசங்களை வைத்துள்ளார்கள். தமிழ் முறைப்படி திருவாசகம் 59 பதிகங்களை ஒவ்வொரு பதிகமாக பாடி பூர்ணாகுதி செய்யப்பட்டது. கௌரிசங்கர் சிவாச்சாரியார் தலைமையில் 11 சிவாச்சாரியர்கள், திருமுறையாளர்கள் இந்த பிரமாண்டமான யாகத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தான் செய்த இந்த யாகத்தை வீடியோவாகவும் எடுத்த அமைச்சர் எம்.சி. சம்பத் அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு தேர்தலின் போதும் யாகம் செய்வது வழக்கம், அதன்படிதான் இந்த யாகம் என்கிறார்கள் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள்.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *