அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை பள்ளி மாணவி மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாஸ்டல் வார்டனின் டார்ச்சர் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மற்றொரு பக்கம், கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது. உண்மையில் மாணவியின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஜனவரி 24) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரியவந்தவுடன், இதுகுறித்து உடனடியாக அம்மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோரிடம் விசாரிக்கக் கூறி முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி சில கருத்துக்கள் எங்களுக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பலர் பல்வேறு விதமான காரணங்களைக் கூறி வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை, மதம், சாதி, அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த சம்பவத்தில் காரணங்கள் எதுவாக இருந்தாலும்,காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஒன்று. இதுதொடர்பாக விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும், முன்னாள் மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கருத்துகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த விஷயத்தை சில அமைப்புகள் அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் சில அமைப்புகள் வீடியோ எடுத்தது தவறு. பள்ளிக் கல்வி துறைதான் அதை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, மாணவி தற்கொலைக்கான உண்மை காரணத்தை கண்டறிந்து, உரியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வி துறையும் விசாரணை நடத்தி வருகிறது. தற்கொலைக்கான காரணங்கள் இனிமேல்தான் தெரிய வரும். காரணம் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதேசமயம் மாணவ, மாணவிகளை ஒருபோதும் எந்த ஒரு வேலையையும் ஆசிரியர்கள் செய்ய கூறக் கூடாது. பள்ளி பராமரிப்பு பணிகளில் மாணவர்களை ஒருபோதும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தக் கூடாது. பராமரிப்பு பணியாளர் இல்லாவிட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட சிஇஓவிடம் ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர் ”தமிழ்நாட்டில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும். அதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு என்ன ஆலோசனை வருகிறதோ அதை பின்பற்றி செயல்படுவோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஏற்கனவே சொன்னதுபோல்தான், ஊரடங்கு குறித்தான ஆய்வுக் கூட்டதில் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு விஷயத்தில் மற்ற மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.
**-வினிதா**
�,