மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு சாமானியர்கள் முதல் முன்கள பணியாளர்கள், அமைச்சர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மே 17 இயக்கத்தின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி, தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, அதன் காரணமாக சிறை சென்று வந்துள்ளார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது இன்று (ஜூலை 28) உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தி குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 4 அமைச்சர்கள் உள்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், அரசியல்-சமூக அமைப்பின் தலைவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.
இதுபோலவே சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி பார்வையிட்டு வந்தார்.
அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவை ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,