மனுஸ்மிருதி: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Published On:

| By Balaji

ஐரோப்பிய பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மனுதர்மம் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறது என பேசினார்.

பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமாவளவன் பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஆனால், மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை தான் மேற்கோள் காட்டியதாக தெரிவித்த திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதியைத் தடை செய்ய ஆர்பாட்டமும் நடத்தினார்.

இந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியல் லாபத்துக்காக இந்துக்களை அவமதித்ததுடன், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் திருமாவளவன் செயல்பட்டதாக அதில் குற்றம்சாட்டினார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (நவம்பர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றச் செயலாளரிடம் அக்டோபர் 27ஆம் தேதி அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “மனு ஸ்மிருதி சட்டப் புத்தகம் இல்லை. அதன் மொழிபெயர்ப்பு என்பது சரியா தவறா என்பது கூட தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீதிமன்றத்தை நாடக்கூடாது” என்று கருத்து தெரிவித்தனர்.

எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் கேட்ட அவகாசத்தை வழங்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவாக புதிய மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர். இதனை மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொண்டு வாபஸ் பெற்றதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment