மனவளர்ச்சி குன்றியோரை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் குஷ்பு.
காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, கடந்த 13ஆம் தேதி டெல்லியிலிருந்து தமிழகம் வந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் ஏன் கட்சியில் இருந்து வெளியே வந்தேன் என்பதை யோசிக்கக்கூட முடியாத மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது எனச் சாடினார்.
‘மூளை வளர்ச்சி’ இல்லாத என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி நடிகை குஷ்பு விமர்சனம் செய்ததற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. இதுபோலவே, மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்படும் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் நாதன், “பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை” எனக் கேள்வி எழுப்பினார். குஷ்பு தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தீபக் வலியுறுத்தினார்.
மேலும், குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுக்க பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நடிகை குஷ்பு, அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன். மக்களின் பன்முகத்தன்மையை உணர்ந்தவள் மட்டுமின்றி அதில் இருந்து பெருமளவில் பெற்றும் உள்ளேன்” என்றும் கூறியிருக்கிறார் குஷ்பு.
**எழில்**�,