செல்வ வரி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சேர்ப்பது குறித்துப் பதிலளிக்க தீபா தீபக்கிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாகச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்து வீட்டுச் சாவியை தீபக் தீபாவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுபடி இருவரும் வேதா இல்ல சாவியைப் பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2008-2009ஆம் ஆண்டுக்கான வெல்த் டேக்ஸ் எனப்படும் செல்வ வரி தொடர்பான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 2008ஆம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கை இந்த வழக்கில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வில் இன்று (பிப்ரவரி 21) விசாரணைக்கு வந்தபோது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம் வருமானவரித் துறை தாமதமாக வழக்கு தொடர்ந்து உள்ளதால், பதில் மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள் தீபா மற்றும் தீபக் பதிலளிக்கக் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர் .
**-பிரியா**