சிஏஏ: சட்டமன்ற முற்றுகை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது!

Published On:

| By Balaji

மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டமன்றம் இன்று (மார்ச் 9) தொடங்கியிருக்கும் நிலையில்… சிஏஏ, என்பிஆர், என் ஆர் சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டமன்றத்தை முற்றுகை யிடும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் காவல்துறையுடனான பலத்த தள்ளுமுள்ளு மோதலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீஸார், வேண்டுமெனில் வடக்குக் கடற்கரை சாலை அருகே உள்ள சிறு தெருவில் ஆர்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினரோ கோட்டையை நோக்கித்தான் செல்வோம் என்ற உறுதியோடு இன்று காலை பாரிமுனையில் கூடினார்கள். அங்கே முதலில் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ அண்டை மாநிலங்கள் எல்லாம் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும்போது தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்? அதனால்தான் சட்டமன்றத்தை நோக்கி செல்ல இருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளுக்கு என் வேண்டுகோள் என்னவென்று சொன்னால், நாங்கள் ஏதோ வன்முறை செய்வதற்காக வரவில்லை. போராடுவதற்குத்தான் வந்திருக்கிறோம்” என்று பேசினார்.

பின் பாரிமுனையில் இருந்து ரிசர்வ் வங்கி வழியாக சட்டமன்றத்தை நோக்கி ஆண்கள், பெண்கள் என்று சுமார் ஆயிரம் பேர் செங்கொடிகளோடும், முழக்கங்களோடும் புறப்பட்டனர். ஆனால் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டு அவர்களைத் தடுத்தனர். போலீசாரின் தடுப்பை உடைத்துக் கொண்டு பலரும் முன்னேறி செல்ல, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது.

சுமார் ஒருமணி நேரத்துக்குப் பின் அனைவரையும் கைது செய்தனர் போலீஸார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share