தமிழகத்திற்கு ரூ. 1928 கோடி நிதி ஒதுக்கீடு: இப்போதும் குறைவுதான்!

Published On:

| By Balaji

தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுவித்தது. அதில், தமிழகத்துக்கு 1928.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது. ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்தும் தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 9,000 கோடி தேவைப்படுவதாக பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை வலியுறுத்திய நிலையில், மிகவும் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மத்திய வரிகளுக்கான மாநில நிதிப் பகிர்வின் தவணைத் தொகை ரூ. 46,038.70 கோடியை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளார். அதில் தமிழகத்திற்கு 1928.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8255.19 கோடி ரூபாயும், பிகாருக்கு 4631.96 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 3,630.60 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 3,461.65 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மஹாராஷ்டிராவிற்கு 2824.47 கோடி ரூபாயும், ராஜஸ்தானிற்கு 2,752.65 கோடியும், ஒடிஷாவிற்கு 2,131.13 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல தென் மாநிலங்களுக்கு குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு 1892.64 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 1678.57 கோடி ரூபாயும், தெலங்கானாவிற்கு 982 கோடி ரூபாயும், கேரளாவிற்கு 894.53 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் தென்மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியையும் விட உத்தர பிரதேசத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share