தேர்தல் நடத்துவதில் பாரபட்சம் காட்டுவதாக தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை நியமித்துள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரிகள், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் அலுவலகங்களில் பணியாற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் இதர சில அலுவலர்கள் தேர்தல்கள் முடிந்த பின்னர் பழிவாங்கப்படுவதாக தனது கவனத்துக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக ஒரு கடிதத்தை மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ளது.
“ பெரும்பாலான நிகழ்வுகளில் இத்தகைய அலுவலர்கள் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்காக தங்களது கடமையை பாரபட்சமின்றி செய்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, விரிவான ஆய்வுக்கு பிறகு இந்தக் கடிதம் எழுதப்படுகிறது” என்று சுட்டிக் காட்டும் தேர்தல் ஆணையம், ஜனவரி 15 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், “ தலைமை தேர்தல் அதிகாரிகள் முதல் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் வரையிலான அலுவலர்கள் மீது அவர்களது பதவிக் காலத்தின் போது மற்றும் அவர்களால் நடத்தப்பட்ட தேர்தலின் ஒரு வருடத்திற்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் பெற வேண்டும்.
தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவரது கடமையை ஒழுங்காக செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கும் வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட இதர வசதிகளை குறைக்க வேண்டாமென்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்கள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.”என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் அப்போதைய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இனி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும் என்பது தேர்தல் அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்காதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
**-வேந்தன்**�,