வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகில் 130 நாடுகளில் பரவி மக்களை மிரட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது, இதுவரை இரண்டு பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ள மத்திய அரசு,கொரோனாவால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 15) வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழல் ஏற்பட்டால், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள்,வணிக வளாகங்கள், போன்ற மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரம் பேணவும், குறிப்பாக வீட்டுக்குள் நுழையும்போது கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவுவதை உறுதி செய்யவும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்” என்று தெரிவித்தார்.
**எழில்**
�,”