இ பாஸ்- பொதுப் போக்குவரத்து: முழு மனதோடு முடிவெடுக்காத முதல்வர்!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 29 ஆம் தேதி நடத்திய மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை, மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றுக்குப் பின் நேற்று (ஆகஸ்டு 30) அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஊரடங்கில் மிக முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளார்.

அதில் முதன்மையானதாக இ பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது என்பதும் மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுகிறது என்பதும் முக்கியமானது.

நேற்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “ **தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழகத்திற்கு வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும்.** ஆதார், பயணச்சீட்டு, தொலைபேசி எண்ணுடன் பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் ஆட்டோ ஜெனரேடட் முறையில் இ பாஸ் வழங்கப்படும்.

**அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.** இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும். இதன்மூலம் ஒரு நாளைக்குத் தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன் வழிபாட்டுத் தலங்களில் உள்ளேயும், கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். **இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.**

மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போதெல்லாம் செய்தியாளர்களை சந்தித்தபோது, இ பாஸ் நடைமுறையை நியாயப்படுத்தும் விதமாகவும், பொதுப் போக்குவரத்தை தொடங்கும் சாத்தியங்கள் குறைவு என்ற ரீதியிலுமே பேசி வந்தார்**. ஆனால் ஆட்சியர்கள்,மருத்துவ நிபுணர்கள் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவை மாற்றிக் கொண்டாரா?

இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் பேசினோம்.

“உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றும் சில தமிழக நிபுணர்கள் முதல்வரோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் முதல்வரிடம் அடிக்கடி தெரிவித்து வந்த விஷயம் என்னவெனில் தமிழகத்தில் நோய்த் தொற்று சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களைத் தாண்டி மாவட்டத் தலைநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் தொடர்வதுதான் சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் மத்திய அரசு ஒருபக்கம் தளர்வுகளை ஒவ்வொரு துறையிலும் அதிகமாக்க அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இ பாஸ் முறை வேண்டாம் என்றே மத்திய அரசு சொல்கிறது.

இது ஒருபக்கம் என்றால் தமிழக எதிர்க்கட்சிகள் இ பாஸ் முறையை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பை உணர்ந்துதான் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் என்று ஆகஸ்டு 17 முதல் தளர்த்தினார் முதல்வர். அதன் பிறகும் இ பாஸ் ஏன் அவசியம் என்றால், யார் எங்கே போகிறார்கள் என்ற விஷயம் தமிழக அரசுக்குத் தெரியவேண்டும் அப்போதுதான் கான்டாக்ட் டிரேஸ் எனப்படும் தொடர்புத் தடமறிதல் சாத்தியமாகும் என்று சொன்னார் முதல்வர்.

ஆனால் **எதிர்க்கட்சிகளின் கடுமையான நெருக்கடி, மத்திய அரசின் தொடர் வற்புறுத்தல், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் முழு மனம் இல்லாமல்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர்**. நேற்று தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த முதல்வர், ‘நாம் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று கருதினோம். ஆனால் இவ்வளவு நெருக்கடிகளை எதிர்க்கட்சிகள் கொடுக்கிறார்கள். இப்போது எல்லாவற்றையும் திறந்துவிட்டு தொற்று எண்ணிக்கை அதிகமானால் அதற்கும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள். எனவே இதை ஒரு டிரையலாகவே பார்ப்போம்’ என்று கூறியிருக்கிறார், நோய்த் தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.

**-ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share