திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 16) காலை உடல் நலக் குறைவால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த சில நாட்களாகவே தன் வீட்டில் கட்சியினரையும், பொதுமக்களையும் சந்தித்து வாழ்த்துகள் வழங்கி வந்தார் துரைமுருகன். வீடு தேடி வரும் அனைவருக்கும் வாழ்த்துகளோடு வேட்டியும் அணிவித்து வாழ்த்துவது துரைமுருகனின் வழக்கம். நின்றபடியே வாழ்த்திக் கொண்டிருந்த துரைமுருகன் சில சமயங்களில் கால் வலி அதிகமானதால், உட்கார்ந்தபடியே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
சில நாட்களுக்கு முன் துரைமுருகனின் வலது காலில் சிறு காயம் ஏற்பட்டு செப்டிக் ஆகிவிட்டது. அதனால் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காலில் கட்டு போட்டுக்கொண்டுதான் பொங்கல் விழாவிலும் அமர்ந்திருந்தார்.
இதனால்தான் அவர் கொஞ்ச நேரம் கூட தொடர்ந்து நிற்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தன்னை சந்தித்த திமுக நிர்வாகிகளிடம் இதைச் சொல்லி, ‘எப்பவுமே உட்கார்ந்து வாழ்த்துகளை வாங்க மாட்டேன். இந்த வாட்டி முடியலைய்யா’என்று தனது கஷ்டத்தைச் சொல்லியிருக்கிறார்.
சில நாட்களாகவே துரைமுருகனின் சர்க்கரை அளவும் அதிகமாகியிருக்கிறது. பொங்கல் திருவிழாவில் கேக் வெட்டியபோது கூட சாம்பிளுக்கு சிறிதளவே சாப்பிட்டார் துரைமுருகன். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தவர், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அருகே உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 83 வயதாகும் துரைமுருகன் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதிதான் அவர் பொதுக் கணக்குக் குழு கூட்டங்களுக்கு சென்று வரும்போது லேசான உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று திரும்பினார். இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நலம் குறித்து திமுக தலைமை முதல் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
**-வேந்தன்**�,