கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும்- மினி தொடர் -17
திமுகவில் நடக்கும் அனைத்தையும் அறிந்திருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகளின் நெருடலை எல்லாம் தாண்டி, பிரசாந்த் கிஷோரை தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்றால், அதற்கான காரணம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அழுத்தமான ஆலோசனைதான்.
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் என்ட்ரி ஆகிறார் என்றால், அவரது நிபந்தனைகளால், விதிமுறைகளால் திமுக மாசெக்களுடைய மவுசு குறைந்துவிடும் என்ற விவாதம் மாசெக்கள் மத்தியிலேயே நடந்துகொண்டிருக்கிறது. திமுக வெற்றி பெறும்போது இந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அமைச்சர்கள் ஆகப் போகிறவர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரச்சினைகள், கட்சிப் பிரச்சினகள், பொதுப் பிரச்சினைகள் போன்றவற்றை கட்சியின் தலைவருக்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டிய பொறுப்பு திமுகவில் மாசெக்களுதான் இருக்கிறது. அதனால்தான் ஆட்சி அமைக்கும்போது மாசெக்களுக்கே முக்கிய அமைச்சர்கள் பொறுப்பு அளிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர்கள் என்ற மகத்தான பொறுப்புகளில் இருப்பவர்கள் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் உள்ளே வந்ததும் தங்களுக்கான முக்கியத்துவத்தை இழந்துகொண்டிருப்பதாக உணர்கிறார்கள். ‘பிகே வந்து ஒருவேளை ஜெயித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாலும், அதன்பின் கட்சியையும், ஆட்சியையும் நடத்த மாசெக்கள் வேண்டாமா? ஒப்பந்தத்தில் மாசெக்களோடு எந்த ஆலோசனையோ பரிந்துரையோ மேற்கொள்ளமாட்டோம்,. தலைமையோடு மட்டும்தான் மேற்கொள்வோம் என்று பிகே டீம் சொல்லியிருக்கிறதாமே? அப்படியென்றால் இனிமேல் நாங்கள் எதற்கு?’ என்று கூட சில மாசெக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களோடுதான் கட்சியில் வளர்ந்தவர். அவர் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது மாவட்டச் செயலாளர்கள்தான் அவருக்கு பக்க பலமே. இதை அவர் பல கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் மாசெக்களின் மவுசைக் குறையவிடுவாரா? இதை ஒரு மாவட்டச் செயலாளர் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.
பிகேவுடனான ஒப்பந்தம் மாசெக்களுக்குக்கான மவுசை குறைக்காது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே, அந்த ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்து போட ஒரு மாவட்டச் செயலாளரையே தேர்வு செய்தார் ஸ்டாலின்.
திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கையெழுத்திட, ஐபேக் டீம் சார்பில் அதன் நிர்வாகி கையெழுத்திட, இந்த ஒப்பந்தத்துக்கு சாட்சிக் கையெழுத்து போட்டவர் திமுகவின் மூத்த மாவட்டச் செயலாளர் கே.என். நேரு. இந்த ஒப்பந்தத்தில் நேரு சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் நேரு என்று தெரிந்தவுடன் திமுக முக்கியஸ்தர்கள் பலரும் நேருவுடன் பேசி, ‘அண்ணே… ஒப்பந்தத்துல என்ணன்னே இருக்கு?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆர்வமாகிவிட்டார்கள்.
பிகேவுக்கும் திமுகவுக்கும் இடையில் கைச்சாத்தாகியிருக்கும் ஒப்பந்தத்தில் கட்சியின் சுயமரியாதையை பாதிக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை என்பதுதான் நேருவை சாட்சிக் கையெழுத்து போட வைத்ததன் மூலம் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தி.
ஐபேக் டீம் முறைப்படி திமுகவுக்கான செயல் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது. மேல் மட்ட ரீதியிலான சில பணிகளையும் துவக்கிவிட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். அதுபோக ஐபேக் சார்பில் திமுகவுக்காக பணியாற்ற தகுதியான நபர்களின் தேர்வும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது!
(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்)
[ஸ்டாலினிடம் உண்மையை சொன்ன ஜெகன் தம்பி](https://minnambalam.com/politics/2019/12/21/31/jegan-mogan-reddy-recommend-to-mkstalin-for-prasanth-kishore)
�,