டிஜிபி கேட்ட அவசர ரிப்போர்ட்!

Published On:

| By Balaji

கடந்த 10 ஆண்டுகளில் அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து குறித்த, விவரங்களை அனைத்து மாவட்ட காவல்துறையினரிடமிருந்து கேட்டு பெற்றுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.

தமிழகக் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மாநகராட்சி காவல் துறை ஆணையர்களுக்கும் அவசர சுற்றறிக்கையை அக்டோபர் 12ஆம் தேதி ஃபேக்ஸ் மூலமாக அனுப்பினார். அதில் மிக மிக அவசரமானது என்றும், அக்டோபர் 14ஆம் தேதிக்குள் இதில் கேட்கப்பட்ட விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அப்படி என்ன அவசரமான ரிப்போர்ட் என்று சென்னை மாநகர காவல்துறையினரிடம் விசாரித்தோம்,

“கடந்த பத்து ஆண்டுகளில் (அதிமுக ஆட்சியில்) அரசுப் போக்குவரத்து கழகங்களால் ஏற்பட்டுள்ள விபத்துகள் எத்தனை, அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள், ஊனமானவர்கள், அடிபட்டவர்கள், வழக்குகள் போன்ற விபரங்களை டீஜிபி கேட்டுள்ளார்.

மாவட்ட மாநகர ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரத்தில் ஆராய்ந்து கண்டுபிடித்து முழு விபரங்களையும் அனுப்பினர்” என்றனர்.

எதற்காக இந்த விபரங்களை டிஜிபி கேட்டுள்ளார்  என்று விசாரித்ததில்,   “கடந்த பத்து ஆண்டுக் காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளைப் பராமரிப்புகள் இல்லாமல் இயக்கியுள்ளார்கள். ஆனால் அதிகமான செலவுகள் செய்ததாக ஊழல்கள் நடந்துள்ளது. அதைப் புள்ளி விபரங்களோடு மக்களுக்கு தெரியப்படுத்தவும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்த இழப்புகள் கொடுக்கப்போகும் இழப்புகள், இதனால் எவ்வளவு நஷ்டம் என தெரியப்படுத்த முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினர்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share