தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) நடத்திய சந்திப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநில அரசியலிலும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திருணமூல் காங்கிரஸுக்கும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். இரு மாநிலங்களிலுமே தனது கட்சிகாரர்களை வெற்றிபெறச் செய்தார் பிகே.
அதேநேரம் இனிமேல் நான் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட மாட்டேன் என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின் அறிவித்தார் பிகே.
இந்த நிலையில்தான் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவார், மும்பையிலுள்ள தனது புகழ் பெற்ற சில்வர் ஓக் இல்லத்தில் பிரசாந்த் கிஷோருடன் சுமார் மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். சரத் பவாரோடு தேசியவாத கட்சியின் மகாராஷ்டிர தலைவர் ஜெயந்த் பாட்டில், சட்டமன்ற உறுப்பினரும் பவாரின் மருமகனுமான ரோஹித் பவார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மூன்று மணி நேர சந்திப்பை அடுத்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஓர் வலிமையான அணியை கட்டமைக்க ஆலோசனை நடத்தினார்கள் என்று தகவல்கள் பரவின. ஆனால் பிரசாந்த் கிஷோர், “சரத் பவார்ஜியுடனான எனது சந்திப்பு தனிப்பட்ட மரியாதை நிமித்தமானது. சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தோம் அவ்வளவுதான்” என்கிறார்.
அதேநேரம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், “எங்கள் தலைவர் சரத்பவார் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் தேசிய அளவிலான கட்சிகளின் தரவுகள் தெரிந்தவர். இந்த நிலையில் இருவரின் கலந்துரையாடலில் பாஜகவுக்கு எதிரான வலிமையான அணி அமைப்பது பற்றிய தரவு ரீதியான கருத்துப் பகிர்வுகள் இருந்திருக்கும்”என்கிறார்.
பவார்-கிஷோர் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கியமான இன்னொரு விஷயம் காங்கிரசாருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 இடங்கள் ஒதுக்கியது பற்றியும் இந்த விவாதத்தில் பேசப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 25 என்ற குறைவான இடங்கள் ஒதுக்கியது பற்றி பவார், ஜெயந்த் பாட்டில் ஆகியோர் கிஷோரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு பிரசாந்த் கிஷோர், “ கூட்டணியின் ஒரு பகுதியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை குறைத்தது திமுகவுக்கு அதிக பலன் அளித்தது” என்று பதிலளித்திருக்கிறார் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, “இதை தமிழ்நாடு தேர்தல் என்று மட்டும் பார்க்க முடியாது. நாளை பிற மாநில தேர்தல்களிலும் காங்கிரஸை இதே அளவுகோல் கொண்டு பார்க்கும் விபரீதத்தை இது ஏற்படுத்திவிடும்”என்று எச்சரித்திருந்தார். அதன்படியே இப்போது கூட்டணியில் காங்கிரஸுக்கு சீட் குறைப்பது என்பதை அந்தந்த மாநிலத்தில் இருக்கும் வலிமையான கட்சிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளன. சரத் பவாரும் அதை ஆலோசிக்கத் தொடங்கியிருக்கிறார்.
**-வேந்தன்**
�,