திமுகவினர் மீது அதிமுக அமைச்சர்கள் பொய் வழக்கு போடுவதை எதிர்கொள்ளவும், மாவட்ட வாரியாக அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகளை பட்டியலிடவும் கடந்த மே 24 ஆம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்… ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே 27 ஆம் தேதி திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் குழுவினர் டிஜிபி திரிபாதியை சந்தித்து, “திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்” என்று புகார் கூறினார்கள்.
ஆனால் இதற்குப் பிறகு மே 30 ஆம் தேதி இரவு கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டம் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்றல் செல்வராஜை சந்தித்து வருகின்றனர்.
ஏன் கைது செய்யப்பட்டார் தென்றல் செல்வராஜ்?
மே 26 ஆம் தேதி, “கோவை மாவட்டம் சிங்கையென்புதூர் வழியாக சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக உடைக்கப்படும் கல் ஏற்றிக்கொண்டு கிணத்துக்கடவு அருகே சிங்கையென்புதூர் வழியாக கேரளா எல்லைக்கு மிக வேகமாக நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால் மக்கள் சாலையில் பயணிக்கமுடியாத சூழ்நிலை. இன்று மதியம் 12.00 மணியளவில் லாரியில் கல் அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்ததால் சாலையில் மறுபுறம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த பழனிச்சாமி என்பவர் மீது விழுந்தது. அவர் காலில் அடிபட்டு கீழே விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டது. சுற்றி இருந்த மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை பாதுகாத்தனர். இதனை அறிந்து அந்த இடத்திற்கு சென்ற கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கனிம வளங்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த துணை போகும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எட்டிமடை சண்முகம் ஆகியோர் கைக்கூலிகளாக செயல்படும் அளவுக்கு அதிகமாக கல் ஏற்றிக்கொண்டு மதுபானங்களை கடத்திக்கொண்டு வரும் லாரிக்கு பாதுகாப்பு கொடுத்தும் லாரிகளை தப்பிக்க வைக்க முயற்சித்த காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்” என்று செல்வராஜின் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செல்வராஜ் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டு நீதிபதி செல்லையா முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோபி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “நடந்த சம்பவம் பற்றி அமைச்சர் வேலுமணியைக் குறிப்பிட்டு சமூக தளங்களில் வதந்தி பரப்பியதாக தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்தி ஆனந்தை மஃப்டியில் சென்ற போலீஸார் கைது செய்து கிணத்துக் கடவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆழியாறு அருகே கீர்த்தியை போலீஸார் ஆம்னி வேனில் அழைத்து வந்தபோது மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கும்பலாக மறித்து கீர்த்தியை மீட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து போலீஸார் ஏ.எஸ்.பி. அனிதாவுக்கு தகவல் தெரிவித்து அவரது அறிவுரையை அடுத்து கூடுதல் போலீஸார் சென்று கீர்த்தி ஆனந்தையும், அவரை கைது செய்ததைத் தடுத்ததாக செல்வராஜையும் கைது செய்தனர்” என்கிறார்கள்.
கடந்த 24 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இனி எந்த மாவட்டத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்டாலும் நானே அங்கே வந்து போராடுவேன்” என்று கூறியிருந்தார். அதன்படி, கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விரைவில் சமூக இடைவெளிப்படி கோவைக்கே சென்று போராட ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
**-வேந்தன்**
�,