திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகிய நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கள் சமூகத்தின் கல்வி நிலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் முதல்வர் பேசினார். நரிக்குறவர் இன மக்களிடம் பேசிய போது, ‘நேரில் வந்தா சோறு போடுவிங்களா’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார். நீங்கள் வந்தால் விருந்தே வைப்போம் என்று திவ்யா கூறியிருந்தார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று 223 நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆவடி நரிக்குறவர் மக்களுடனும், திருமுல்லைவாயில், ஜெயா நகர்ப் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ’ஸ்டாலின் தான் வர்ராரு’ என அங்கிருந்த சிறுவன் பாட அதைக் கேட்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்கள் வழங்கிய பாசிமணியைக் கழுத்தில் அணிந்துகொண்டார்.
இதையடுத்து நரிக்குறவர் மாணவி திவ்யா வீட்டுக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு அவருக்கு, இட்லி, வடை, நாட்டுக்கோழி கறி குழம்பு என அனைத்தும் சமைத்து பரிமாற தயாராக வைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் வந்து அமர்ந்த முதல்வருக்கு எவர்சில்வர் டம்ளரில் காபி கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சில்வர் தட்டில், இட்லி, வடை சாம்பார், நாட்டுக்கோழி கறி வைத்து கொடுக்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட முதல்வர் அங்கிருந்த சிறுமிக்கும் ஊட்டிவிட்டார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
சாப்பிட்டுக்கொண்டே இருந்த முதல்வர் ஸ்டாலின், காரமாகத்தான் சாப்பிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அங்கிருந்த பெண், ஆமாம், அப்போதுதான் சளி பிடிக்காது, கொரோனா வாராது என்றார்.
அப்போது முதல்வருடன் சென்றிருந்த அமைச்சர் நாசர், இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தடுப்பூசி போட வந்த போது கூட எங்களுக்குப் பாதிக்காது எனக் கூறி மரத்து மேல் எறிக் கொண்டனர் என முதல்வரிடம் கூறினார்.
இதையடுத்து முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்று திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 நபர்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கறி சோறு சாப்பிட்டேன். கொஞ்சம் காரமாக இருந்தது என்றார்.
மேலும் அவர், “மாமல்லபுரத்தில் நரிக்குறவர் பெண்ணை உணவு சாப்பிட அனுமதிக்காதது கண்டு கோபமடைந்தேன் . ஒரு பெண்ணை இப்படிச் செய்தது நியாயமா ? அவரை கோவிலில் அமர வைத்துச் சாப்பிட வைக்க அமைச்சர் சேகர்பாபுவிடம் உத்தரவிட்டேன். அவர் கோவிலில் சாப்பிடுவதைப் பார்த்த பின் தான் எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அஸ்வினி என்ற அந்த பெண் நியாயத்துக்காகக் குரல் கொடுத்தார். இங்கிருந்தே எனது வாழ்த்துகளை அஸ்வினிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
**-பிரியா**