gஆட்சியர்களை அலர்ட் செய்யும் முதல்வர்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்குப் பருவமழை நேற்று (அக்டோபர் 25) தமிழ்நாட்டில் தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழையினால் கடந்த காலங்களில் ஒகி, வர்தா, கஜா உள்ளிட்ட புயல்களால் அதிக அளவில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. மேலும், சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்ததுடன், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் மற்றும் அரசுத்துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்துவது, மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது, அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்தல், அதிகம் மழை பொழிய உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், மக்களுக்கான உரிய நிவாரண முகாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய முதல்வர் மு,க.ஸ்டாலின்,”இயற்கையின் அழைப்பை ஏற்று நாம் கூடியிருக்கிறோம். இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை..முறையாக கையாளவில்லை என்று சொன்னால் அதுவே பேரிடராக மாறிவிடும். இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு நாம் தவறும்போது, அது தான் யார் என்பதை நமக்கு சுட்டுக்காட்டிவிட்டு சென்று விடுகிறது. எனவே, இயற்கையை கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. இயற்கையின் சூழலானது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. பேரிடர் காலத்தில் மக்களை காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது. அதன்படி நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share