கூட்டணியின் வேட்பாளரா? முதல்வரைச் சந்தித்த முருகன்

politics

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோமென பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறலாம் எனவும், திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று (அக்டோபர் 9) மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கி வருகிறார். அத்துடன், அச்சட்டங்களை தமிழக அரசு வரவேற்றதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்தோம். கிசான் நிதியில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்” என்றார்.

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்த முருகன், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்து வந்தோம்” என்றும் குறிப்பிட்டார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா அல்லது கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “இப்போதுதான் தெளிவாகச் சொன்னேனே” என்று பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார். அதாவது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று எல்.முருகன் கூறியிருக்கிறார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *