சிறப்புக் கட்டுரை: போகாத ஊருக்கு வழி தேடும் பாரதீய ஜனதா கட்சி!

politics

ராஜன் குறை

பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு கருத்தியல் அடிப்படை உண்டு. அது இந்துத்துவம். அது வெறும் மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ கிடையாது. மாறாக அது இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் கலாசார தேசியத்தை, அகண்ட பாரதத்தை கட்டமைப்பது. இந்துக்கள் என்ற அடையாளம் என்று சொல்லும்போது சனாதன ஜாதீய இந்து அடையாளம் அதற்குள் புகுந்துகொள்கிறது. அதனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வெறுப்புடன் பார்ப்பனீய, ஜாதீய, ஆணாதிக்க சிந்தனையும் இந்துத்துவத்தில் புகுந்துவிடுகிறது. அதற்கெல்லாம் மாற்றாக, மறுப்பாக உருவானது திராவிடம் என்ற பண்பாட்டு அடையாளமும், அதன் மாநில சுயாட்சி கோரிக்கையும், கூட்டாட்சி தத்துவமும். அதனால் பாரதீய ஜனதாவின் அரசியல் இலட்சியம் ஒற்றை கலாசார தேசியமான இந்துத்துவத்தை மறுதலிக்கும் திராவிட கருத்தியலை வேரறுப்பதுதான். ஆனால் தமிழகத்தின் கள நிலவரத்தில் அதை சாத்தியப்படுத்த வழியில்லை என்பதால் “கழகங்கள் இல்லா தமிழகம்” என்ற போகாத ஊருக்கு வழி தேடுகிறது பாரதீய ஜனதா கட்சி. அதன் விளைவாக வரப்போகும் தேர்தலில் என்னதான் செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் 1984 முதல் மாறி, மாறி நடக்கும் சூழலில் அகில இந்திய அரசியலும், தமிழக அரசியலும் பலவகைகளில் ஆழமான தொடர்புடன் இருந்தாலும் தமிழகத்தில் திராவிடம் என்ற பண்பாட்டு அடையாளம் ஆழமாக விரவியுள்ளது எனலாம். அத்தகு திராவிட அரசியல் பரப்பினுள் “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் முற்போக்கு சக்தியாக தி.மு.க-வும், ஒன்றிய அரசிற்கும், அகில இந்திய கட்சிகளுக்கும் இசைவாக இருக்கும் எதிர்புரட்சி சக்தியாக அ.இ.அ.தி.மு.க இருப்பதையும் வரலாற்றை கூர்ந்து ஆராய்வதன் மூலம் யாரும் புரிந்துகொள்ளலாம். பாஜக-வை பொறுத்தவரை இவற்றிற்கிடையில் எப்படி உள்நுழைவது என்பதே அதன்முன் உள்ள கேள்வி.

**பாஜக-அ.இ.அ.தி.மு.க: ஜெயலலிதா கால உறவு**

பழைய ஜனசங்கம் ஜனதா கட்சியில் ஐக்கியமாகி பின்னர் பிரிந்து, பாரதீய ஜனதா கட்சியாக 1980-ஆம் ஆண்டு உருவான பிறகு அது 1984 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு அது தன் வளர்ச்சிக்கு ராமஜென்ம பூமி பிரச்சினையை கையில் எடுத்தது. 1989-ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியாகவும், ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து போட்டியிட்ட போது தி.மு.க பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா அணியே அதிக ஆதரவை பெற்றதில் அவர் பின்னால் அ.இ.அ.தி.மு.க கட்சி அணிதிரண்டது. ராமர் கோயில், இந்து அடையாளம் என்று இந்தியாவில் பாரதீய ஜனதா காங்கிரசிற்கு எதிராக வளர்ந்தபோது, தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க கட்சியின் தலைமைக்கு வந்தார் ஜெயலலிதா.

அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் போஃபர்ஸ் ஊழல் பிரச்சினையில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி கண்டது. அது ஜெயலலிதாவிற்கு அரசியலில் உயிர் கொடுத்தது. காங்கிரசிற்கு எதிராக அணிதிரண்ட வி.பி.சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. முரசொலி மாறன் பதவியேற்றார் பாரதீய ஜனதா கட்சி இரண்டு தொகுதியிலிருந்து 85 தொகுதியாக முன்னேறியது. வரலாற்று திருப்பு முனையாக வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பணிகளில், கல்வி நிலையங்களில் உறுதி செய்தது ஆதிக்க ஜாதியினரை வெகுண்டெழச்செய்தது.இதற்கு மாற்றாக பாரதீய ஜனதா கட்சி ராமர் கோயில் (மந்திர்) பிரச்சினையை முதன்மைப்படுத்தி ரத யாத்திரை நடத்தியது. ரத யாத்திரையை லாலு யாதவ் பீஹாரில் தடை செய்ததால் ஐக்கிய முன்னணி அரசிற்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. மண்டல்-மந்திர் அரசியல் எதிர் துருவங்களில் மண்டல் கமிஷன் ஆதரவில் தீவிரமாக முன்னின்றது தி.மு.க.

பிறகு 1991-ஆம் ஆண்டு பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் அனுதாப அலையில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழக முதல்வரானார். ஒன்றிய அரசில் நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. பாரதீய ஜனதா ராமர் கோயிலுக்கான இயக்கத்தை தொடர்ந்தது. காங்கிரஸ் ஆதரவால், ராஜீவ் மரணத்தால் முதல்வரான ஜெயலலிதா ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக விளங்கினார். கரசேவைக்கு செங்கல் அனுப்பினார். அதே சமயம் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணியிலும் இருந்தார்.

ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சி அப்பட்டமான ஊழலும், எதேச்சதிகாரமும் நிறைந்ததாக இருந்ததில் வரலாறு காணாத அதிருப்தி அலை எழுந்தது. நரசிம்மராவ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தபோது, மூப்பனார், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை (த.மா.க) தோற்றுவித்தார்கள். தி.மு.க- த.மா.க கூட்டணி சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் அனைத்திலும் அமோக வெற்றிபெற்றது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைய, மத்தியில் தி.மு.க, த.மா.க பங்கேற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி காங்கிரசின் ஆதரவுடன் உருவானது. தேவ கெளடா பிரதமரானார். ஆனால் பாபர் மசூதியை 1992-ஆம் ஆண்டு இடித்து இந்துத்துவ அலையை உருவாக்கியிருந்த பா.ஜ.க 161 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியானது. தேவ கெளடாவை மாற்றி ஐ.கே.குஜ்ராலை பிரதமராக்க வைத்த காங்கிரஸ், அந்த நேரத்தில் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையில் கலைஞர் மற்றும் தி.மு.க ஆட்சியின் மீது கூறப்பட்டிருந்த கருத்துக்களைக் காரணம் காட்டி தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றது. ஐ.கே.குஜ்ரால் மறுத்ததால் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ள ஆட்சி கலைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த 1998 பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஒரு திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றது. பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலிருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றது. ஆனால், வாஜ்பேயி அமைச்சரவைக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த ஜெயலலிதா தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். வாஜ்பேயி அதனை ஏற்க மறுத்தார். சுப்ரமண்ய சுவாமி ஒரு டீ பார்ட்டிக்கு சோனியா காந்தியையும், ஜெயலலிதாவையும் அழைத்தார். ஜெயலலிதா வாஜ்பேயி அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். ஆட்சி பதிமூன்றே மாதங்களில் கவிழ்ந்தது. எப்படியாவது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை கலைக்க வேண்டும், எல்.டி.டி.ஈ ஆதரவுக் கட்சி என தி.மு.க-வை முத்திரை குத்தி தனிமைப்படுத்த வேண்டும் என ஜெயலலிதா கடுமையாக முயற்சி செய்தார். காங்கிரசும் அந்த நோக்கத்தில் இருந்ததால், அந்த நேரத்தில் வேறு வழியின்றி தி.மு.க பாரதீய ஜனதா கட்சியுடன் அணி சேர்ந்தது. இந்த முறை தி.மு.க, பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணியே பெருவாரியான இடங்களில் வென்றது. தி.மு.க வாஜ்பேயி தலைமையிலான அரசில் அங்கம் வகித்தது. அதனை தொடர்ந்து நடந்த 2001 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க-பாஜக கூட்டணி தொடர்ந்தது வெற்றியை தரவில்லை. ஜெயலலிதா-காங்கிரஸ் கூட்டணி வென்று ஜெயலலிதா ஆட்சியமைத்தார்.

ஜெயலலிதா அவரளவிலேயே தனது பார்ப்பன அடையாளத்தையும், இந்துமத அடையாளத்தையும் ஏற்பவராக இருந்தாலும். சனாதன ஆதரவு சிந்தனை கொண்டிருந்தாலும் பாரதீய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவில்லை. குஜராத்தில் 2002-இல் பாஜக அரசின் பின்புலத்தில் நிகழ்ந்த இஸ்லாமியர்கள் படுகொலைக்கு பின்னர் நடந்த 2004 தேர்தலில் தி.மு.க மீண்டும் காங்கிரசுடன் இணைந்தது. மன்மோகன் சிங் தலைமையில் தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது. 2009 தேர்தலிலும் வென்று மன்மோகன் சிங் அரசே தொடர்ந்தது.

பத்தாண்டு கால மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அரசில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதாவின் ஆதரவு நரேந்திர மோடிக்கு தேவைப்படவில்லை. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதைப் போலவே மோடிக்கும், ஜெயலலிதாவுக்குமான உறவு இருந்தது. பாசிசமும், எதேச்சதிகாரமும் ஒத்துப்போகவில்லை.

**ஜெயலலிதாவிற்குப் பின்**

மோடி-அமித் ஷா இரட்டையரின் நோக்கம் இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை அமைப்பதும், இந்திய அரசியலின் அடிப்படைகளையே முற்றாக மாற்றியமைப்பதும்தான். அதற்கு தமிழகம் பெரிய சவலாக இருப்பதை எப்படி எதிர்கொள்வது என்பதில் அவர்களுக்கு தெளிவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் பெரியதொரு கொள்கை பிடிப்பு இல்லாத அ.இ.அ.தி.மு.க கட்சியினை மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து, விழுங்கி பாஜக அந்த இடத்தில் காலூன்றி விடலாம் என்பதே அவர்களது முதல் திட்டம் என்று தோன்றுகிறது. அதற்கு சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் குடும்பம் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை அப்புறப்படுத்த முடிவு செய்தது. ஜெயலலிதா மறைந்தவுடன் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இதை சாதிக்கலாம் என்று நினைத்தது. அந்த முயற்சி வெற்றிபெறாமல் சசிகலா எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்றதால் பின்னர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து அவரையும் தன்வசமாக்கியது. ஆனால் எடப்பாடி அவருக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு தலைவராக முயற்சிப்பது அதற்கு பிடிக்கவில்லை. அண்ணா தி.மு.க-வை விழுங்கி செரிக்கும் திட்டத்திற்கு இந்த போக்கு உதவாது என்பது தெளிவு. அப்படியே சரி போகட்டும், நீண்டகால திட்டத்தை மனதில் வைத்து இப்போதைக்கு கணிசமான தொகுதிகளை எடப்பாடியிடமிருந்து பெறலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல். அது என்னவென்றால் தொகுதிகளை மிரட்டிப் பெறலாம்; ஆனால் ஜெயிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. எடப்பாடியின் தலைமையில் தோற்கத்தான் போகிறோம் என்றால் எதற்காக அவர் தலைமையை ஏற்க வேண்டும் என்று யோசிக்கிறது.

அதனால் எப்படியாவது ரஜினிகாந்த்தை ஒரு கட்சி தொடங்கவைத்தால், அவரது செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தலாம் என்ற திட்டத்தையும் அது முயற்சிக்க விரும்பியது. அவருக்கு சுயமாகவே திராவிட, தமிழ் அடையாளங்கள் மேல் ஒவ்வாமையும், இந்து அடையாளத்தின் மீது தீவிர ஈடுபாடும் இருந்ததால் அவரை வைத்து தமிழகத்தில் திராவிட அரசியல் பரப்பில் ஒரு உடைப்பை ஏற்படுத்தலாம் என்று பாஜக நினைத்ததில் வியப்பில்லை. ஒரு புறம் ரஜினி, மறுபுறம் எடப்பாடி என்ற இரண்டு குதிரையிலும் சவாரி செய்தால் தன்னுடைய ஆதரவு தளம் விரிவாகும் என்ற கணக்கு கவர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் பாவம் பாஜக, ரஜினி அந்த விஷப்பரீட்சையிலிருந்து தப்பித்துவிட்டார்.

இப்போது அதன் முன்னால் உள்ள கேள்வி தி,மு.க-வே தற்போது ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லையென்று அ.இ.அ.தி.மு.க-வை உடைத்து பலவீனப்படுத்தி அதன் சிதறல்களை தனதாக்கிக்கொண்டு, நீண்டகால நோக்கில் தி.மு.க-வை எதிர்த்து வளரலாம் என செயல்படுவதா, அல்லது தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு எடப்பாடியின் பினாமி ஆட்சியே பரவாயில்லை என்று தொடர்ந்து ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் என்ற இரட்டைக் குதிரை சவாரியை தொடர்வதா என்பதுதான். இதில் பிரச்சினை என்னவென்றால் முன்னமே சொன்னது போல இரண்டாவது தேர்வை மேற்கொண்டாலும் அதுவும் வெற்றிபெறாது என்ற சிக்கல்தான்.

ஒரு மல்டிப்ளெக்ஸ் போகிறோம். ஓடும் படங்களில் இரண்டு நல்ல படங்கள் ஓடுகின்றன. எதற்குப்போவது என்று முடிவெடுப்பது ஒரு சிக்கல்தான். ஆனால் ஒருவிதமாக ஒப்பு நோக்கி முடிவுசெய்து விடலாம். ஆனால் எல்லா படங்களும் மோசமான அல்லது நமக்கு பிடிக்காத படங்களாக இருந்தால் எதற்குப் போவது என்று முடிவுசெய்வது எரிச்சலாகத்தான் இருக்கும். அதுபோல எடப்பாடியை ஆதரித்துத் தோற்பதா, அல்லது அ.இ.அ.தி.மு.க கட்சியை உடைத்து எடப்பாடியை தோற்கடித்து தானும் தோற்பதா என்ற தேர்வினை மேற்கொள்வது உண்மையிலேயே எரிச்சலூட்டுவதுதான். பாஜக-வை பொறுத்தவரை போகாத ஊருக்கு வழியாகத்தான் இருக்கின்றன எல்லாம்.

**கட்டுரையாளர் குறிப்பு**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *