என்.பி.ஆர் தீர்மானம்: ஸ்டாலின் -எடப்பாடி காரசார விவாதம்!

Published On:

| By Balaji

என்.பி.ஆர் நிறுத்தம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி என்.பி.ஆர் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தை கொண்டுவர அரசு விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

என்.பி.ஆர் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “என்.பி.ஆரில் கூடுதலாக இணைக்கப்பட்ட மூன்று அம்சங்களில் திருத்தம் கொண்டுவரக்கோரி எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. அதனால், தமிழகத்தில் என்.பி.ஆர் கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை”எனக் கூறினார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 13) கேள்வி நேரத்தின்போது எழுந்த ஸ்டாலின், “என்.பி.ஆரை நிறுத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் ஏன் இந்த அரசு தயக்கம் காட்டுகிறது?. என்.பி.ஆரை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, என்.பி.ஆரை நிறுத்திவைத்தது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏன் தீர்மானம் கொண்டுவரக்கூடாது” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் தேவையில்லை என்ற உண்மை நிலையை தெரிவிக்கவே நேற்று செய்தியாளர்களை சந்தித்தேன். சட்டமன்றத்தில் தெரிவித்ததைத்தான் செய்தியாளர் சந்திப்பிலும் கூறினேன். என்.பி.ஆர் தொடர்பாக அரசு எந்த அறிவிக்கையும் வெளியிடவில்லை. போராட்டத்தை ஸ்டாலின் ஆதரித்துப் பேசியது பதற்றமான சூழலை உருவாக்குவது போல இருந்ததால் விளக்கம் அளித்தேன். மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியுமா என்பதை ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துக் கூறவும். என்.பி.ஆரில் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்பதை உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பொதுமக்களிடமும், சிறுபான்மையினரிடமும் திமுக தொடர்ந்து அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்னும் என்.பி.ஆர் கணக்கெடுப்பே ஆரம்பிக்கப்படவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஒரு கூட்டத்தில்,பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார்.

குற்றம் சுமத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. உண்மையை பேசுவதில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த விஷயத்தை உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். அமைதியாக இருந்து வரும் தமிழகத்தில், பதற்றமான சூழல் உருவாக்கி வருகிறார்கள். சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்தைத்தான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

**-எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share