Yதடையை மீறி பேரணி; தயாராகும் திமுக

Published On:

| By Balaji

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் நாளை (டிசம்பர் 23) சென்னையில் பேரணி நடத்தப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும் திமுகவினரும் பல்வேறு கட்சிகளை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சென்னையை நோக்கி குவிந்து வருகிறார்கள்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், டிசம்பர் 18 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ இந்தக் கூட்டத்தில், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனையொட்டி வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி என்ற மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் இந்தப் பேரணியில் திரளாகப் பங்கேற்குமாறு ஸ்டாலின் பல்வேறு கட்சிகளுக்கும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும் கடிதம் எழுதினார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கிராமப்புற நிர்வாகிகளைத் தவிர்த்துவிட்டு, நகர்ப்புற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அழைத்து வருமாறும், தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் இருந்து அதிக தொண்டர்களை கூட்டி வருமாறும் மாசெக்களுக்கு உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை.

சென்னை எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்தில் இருந்து ராஜரத்தினம் வரை பேரணி நடத்த அனுமதி கேட்டு ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறையிடம் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று (டிசம்பர் 22) மாலை வரை போலீஸாரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டாலும் அதை இன்று இரவுதான் போலீசார் தெரியப்படுத்துவார்கள். அப்படி அனுமதி மறுத்து போலீஸ் எழுத்து மூலம் தந்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாமா என்றும் திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் ஆலோசனை நடந்தது. ஆனால் காவல்துறை அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பேரணியை பிரம்மாண்டமாக நடத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தில் இருக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள்.

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி எடப்பாடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் மமக சார்பில் அனுமதியின்றிதான் முன்னெடுக்கப்பட்டது. அதே வகையில் இந்தப் பேரணியையும் நடத்துவது என்பதில் குறியாக இருக்கிறது திமுக. பேரணிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை சென்னையைச் சுற்றியுள்ள டோல்கேட்டுகளில் கண்காணிக்கத் தொடங்கிவிட்டனர் உளவுத்துறையினர்.

இந்தப் பேரணியை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் விதமாக மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கும் வகையில் ஆங்கில வாசகங்களை கொண்ட பதாகைகளை சமூக தளங்களில் பரப்பி வருகிறார்கள் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share