அம்மா உணவகம் மூடப்படாது: முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Balaji

அம்மா உணவகம் மூடப்படாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அம்மா கிளினிக்குகள் மூடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அம்மா உணவகத்தையும் மூட திமுக முயல்வதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன கலைஞர் பெயரிலிருந்த எத்தனை திட்டத்தை நீங்கள் மூடி உள்ளீர்கள் என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அம்மா உணவகங்கள் மூடப்படக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். எந்த ஒரு அம்மா உணவகமும் மூடப்படாது. நான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகம் மூடப்படாது என்று அறிவித்தேன். இதுவரை அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். இதன் பின்னும் இதே நிலைப்பாட்டில் தான் இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

அதுபோன்று, கடந்த அதிமுக ஆட்சியில் முந்தைய திமுக அரசின் திட்டங்களைப் புறக்கணித்தது போல் நாங்கள் அதிமுக திட்டங்களை புறக்கணிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞரின் பெயரை நீக்கியது, கடற்கரை பூங்காவில் கலைஞர் பெயரை நீக்கியது, உழவர் சந்தையை மூடியது, நமக்கு நாமே திட்டம், வரும் முன் காப்போம் திட்டங்களை கிடப்பில் போட்டது என கலைஞரின் எந்தெந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது என்று சட்டப் பேரவையில் முதல்வர் பட்டியலிட்டார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share