wவிரைவில் ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடந்துமுடிந்து, அதன் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டன. நீதிமன்ற உத்தரவால் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற பதிலையே தேர்தல் ஆணையம் தரப்பு சொல்லி வருகிறது. தேர்தல் நடத்தக்கோரும் வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் மார்ச் 3ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அதில், தேர்தல் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும், தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமித்து மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 5) அரசிதழில் அறிவித்துள்ளது.

சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாகப் பேசி வருகின்றனர். கடந்த முறையும் அவர்கள் சொன்னது போலவே உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதால் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share